'சிரிலிய சவிய' திட்ட வாகனத்தை பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு | தினகரன்

'சிரிலிய சவிய' திட்ட வாகனத்தை பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு

* மனித எச்சங்கள், வெடிபொருட்கள் இருந்தனவா? அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு

வழக்கின் தடயப்பொருளாக டிபென்டர் வாகனம்

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனை கடத்திக் கொலை செய்வதற்குப் பயன்படு த்தப்பட்ட 'சிரிலிய சவிய' திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த டிபென்டர் வாகனத்தில், மனித எச்சங்களோ வெடி பொருட்களோ இருந்தனவா ? என ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க பகுப்பாய்வாளர் நாயகத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார நேற்று உத்தரவிட்டார்.

தாஜுதீன் கொலை வழக்குடன் தொடர்புள்ள டபிள்யு.பீ.கே.ஏ.0642 இலக்க டிபென்டர் வாகனம் தற்பொழுது சி.ஐ.டியின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது. தாஜுதீன் கடத்தி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் இந்த வாகனம் கடத்தப்பட்டதாக சாட்சியம் கிடைத்துள்ளதால் இதில் மனித எச்சங்களோ ஆடைகளின் பகுதிகளோ வெடிபொருட்களோ இருந்தனவா? என ஆய்வு செய்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இடையீட்டு மனுவொன்றைச் சமர்ப்பித்து குற்றப்புலனாய்வு பிரிவு முன்வைத்த கோரிக்கையை நேற்று ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவினால் சிரிலிய சவிய அமைப்பிற்கு 2011/08/11 ஆம் திகதி விடுவித்திருந்த இந்த டிபென்டர் வாகனம் ஒரு நாளாவது சிரிலிய சவிய பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்று சி.ஐ.டி நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

அந்த வாகனம் யோஷித்த ராஜபக்‌ஷ தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதாகவும் யோஷித்தவின் ஆலோசனைக்கமைய 2012 டிசம்பர் மாத நடுப்பகுதியில் சீ.எஸ்.என் ஊடக வலையமைப்பின் விற்பனை நிறைவேற்றுப் பணிப்பாளர் டீன் என்பவரால் டிபென்டர் வாகனம் கொள்ளுபிட்டி பகுதி கராஜ் ஒன்றில் கறுப்பு நிற வர்ணம் பூசப்பட்டதாகவும் சி.ஐ.டி, நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனவரி 20 அல்லது 21 ஆம் திகதி இந்த வாகனம் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிந்த குலசேகர என்பவரின் வீட்டில் கைவிடப்பட்டிருந்தது. சந்தேகத்திற்கிடமான இரு டிபென்டர் வாகனங்கள் ஹோமாகம ,ஹபரகட பகுதியில் இருப்பதாக 2016 மார்ச் 3 ஆம் திகதி சி.ஐ.டிக்கு தகவல் கிடைத்ததையடுத்து இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகவும் சி.ஐ.டி நீதிமன்றத்தில் அறிவித்தது.

செஞ்சிலுவை சங்க பணிப்பாளர் நாயகத்தின் பெயரில் இந்த வாகனம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2015 பெப்ரவரி 20 ஆம் திகதி ஹபரகட பகுதியில் வைத்து கறுப்பு நிற டிபென்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாகனம் 2011 இல் யோஷித்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய பொல்ஹேன்கொட பகுதியில் வைத்து வாகனத்தின் வெள்ளை நிறம் மாற்றப்பட்டு நீல நிறம் பூசப்பட்டது.

2012 டிசம்பரில் கொள்ளுபிட்டி கராஜ் ஒன்றில் கருப்பு நிறம் பூசப்பட்டது என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாகனத்திற்கு ஜனாதிபதி செயலகத்தினால் எரிபொருள் மற்றும் பராமரிப்பு என்பவற்றுக்காக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி அறிவித்தது.

நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்திற்கருகில் வைத்து 2012 மே 17 ஆம் திகதி அதிகாலை வாகனமொன்று தீப்பற்றி எரிந்தது.இதிலிருந்து தீக்காயங்களுடன் ரகர் வீரர் தாஜுதீனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலை என தெரிவித்த சி.ஐ.டியினர் தாஜுதீனின் கடத்தலுக்கு இந்த டிபென்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நியாயமான சந்தேகம் ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். டிபென்டர் வாகனத்தை தடயப் பொருளாக அறிவிக்குமாறும் சி.ஐ.டி நீதிமன்றத்தை கோரியது.

இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான் டிபென்டர் வாகனத்தை தாஜுதீன் வழக்கில் தடயப்பொருளாக பெயரிட அனுமதி வழங்கினார்.

(நமது நிருபர்)

 


Add new comment

Or log in with...