வடமாகாண சபையின் ஐந்து வருட அர்த்தமற்ற வீண் பயணம்! | தினகரன்

வடமாகாண சபையின் ஐந்து வருட அர்த்தமற்ற வீண் பயணம்!

வடக்கு மாகாண சபை ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து விட்டது. அதன் பதவிக் காலம் நாளை 23 ஆம் திகதியுடன் முடிவடையப் போகின்றது.

இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையின் கீழ் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அம்மாகாண சபைக்கான தேர்தல் அப்போது நடத்தப்பட்டது.

இந்திய அமைதி காக்கும் படையினர் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த அக்காலப்பகுதியில் அத்தேர்தல் நடத்தப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சராக அ. வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவர்கள் அன்றைய காலப் பகுதியில் இரு நாடுகளின் தலைவர்களாகவிருந்த ஜே. ஆர் , ராஜீவ் ஆகியோராவர்.

ஜே. ஆரின் இரு பதவிக் காலங்கள் முடிவுக்கு வந்து ஆர். பிரேமதாச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதனாலும், இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தாலும் வடக்கு – கிழக்கு மாகாண சபை தனது எதிர்காலத்தை இழந்து போனது.

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படாமல் செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழேயே அம்மாகாண சபை இயங்கியது.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியதையடுத்து அவரது பதவிக் காலத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணம் முன்னரைப் போல தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது.

மாகாண சபைத் தேர்தல் கிழக்குப் புதியதாக இருக்கவில்லை. ஏனெனில் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல்கள் நடத்தப்பட்ட அனுபவம் இருக்கிறது. பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், நஜீப் ஏ. மஜீத், ஹாபிஸ் நஸீர் ஆகியோர் கிழக்கின் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.

ஆனால் வடக்கு மாகாண சபைக்கு முன்னைய ஆட்சிக் காலத்தின் போது 2013 ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக தேர்தல் நடத்தப்பட்டது. வடக்கு மாகாண மக்களின் அமோக ஆதரவைப் பெற்று முதலமைச்சராக சி. வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்னிறுத்தப்பட்டிருந்த பொதுவேட்பாளர்.

அவரது தலைமையில் வட மாகாண சபையின் ஐந்து வருட கால ஆட்சிக் காலம் எவ்வாறோ கடந்தோடி விட்டது. நாளையுடன் அம்மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிவடையப் போகின்றது.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, வடக்கு – கிழக்குத் தமிழினத்தின் அரசியல் உரிமைப் போராட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதெனக் கூறுவதில் தவறிருக்க முடியாது.

மிகுந்த ஆயுதபலம் கொண்டிருந்த போராட்ட இயக்கமொன்று இராணுவ வல்லமையுடன் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தில் பேரம்பேசுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விட்டதென்பதே யதார்த்தபூர்வமான உண்மை!

ஆயுதப் போராட்டத்தினால் தமிழினத்தின் அரசியல் உரிமைகளை ஒருபோதுமே வென்றெடுக்க முடியாதென்ற யதார்த்தத்தையும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தெளிவாக எடுத்துக் காட்டியது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் அரசியல் ரீதியான போராட்டம் மட்டுமே தமிழினத்தின் அரசியல் உரிமைகளை வென்​ெறடுப்பதற்குக் கைகொடுக்குமென்ற யதார்த்தமும் உணர்ந்து கொள்ளப்பட்டது.

தமிழினத்தின் மத்தியிலுள்ள அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சாத்விக முறையில் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் வடக்கு – கிழக்குக்கு குறைந்தபட்ச அரசியல் அதிகாரங்களையேனும் வென்றெடுக்க முடியுமென்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டனர்.

அரசியல் உரிமைகளுக்காகப் போராடிப் போராடி வெறுமனே காலத்தைக் கடத்தியதைத் தவிர கண்ட பலன் எதுவுமே இல்லை. பல்லாயிரம் உயிர்களையும் உடைமைகளையும் பறிகொடுத்தது மட்டுமே கண்ட பலன்.

இவ்வாறான நிலையில் வடக்கு மாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிக் கொண்டதன் மூலம் வடக்கை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமென்ற நம்பிக்கை அப்போது துளிர்விட்டிருந்தது.

நீண்டகால யுத்தத்தினால் நிர்மூலமாகிப் போன வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப முடியுமென மக்கள் நம்பினர். தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக தமிழினத்தின் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியுமென மக்கள் எண்ணினர். வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மூலம் தமிழினமானது புதிய அரசியல் கலாசாரமொன்றை உலகுக்குக் காண்பிக்க முடியுமெனவும் வன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் எஞ்சியிருக்கும் மக்களின் அவல வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியுமெனவும் எதிர்பார்க்கப்பட்டது.

வடக்கு மாகாண சபை திறம்பட செயற்படுவதன் மூலம், தமிழினத்தின் நிர்வாகத் திறனை உலகுக்கு எடுத்துக் காட்டி, அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கு வலுவூட்ட முடியுமென புத்திஜீவிகள் பலரும் அவ்வேளையில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

வடக்கு மாகாண சபை ஐந்து வருடங்களைக் கடந்த பின்னர் இப்போது கடந்து வந்து பாதையைத் திரும்பிப் பார்க்கின்றோம். அப்பாதை எங்கும், கசப்பான சம்பவங்களின் பதிவுகளே பதிந்திருக்கின்றன. ஐந்து வருடப் பயணத்தில் எதனைத்தான் பாராட்டுவது என்று தேடிப் பார்க்க வேண்டியுள்ளது.

அரசியல் இணக்கப்பாடின்மையைப் பாராட்டுவதா? நிர்வாகத் திறமையின்மையைப் பாராட்டுவதா? இனப்பற்றுதலை மிஞ்சிவிட்ட போட்டாபோட்டிகளைப் புகழ்வதா?

யாழ்நகரில் செழுமையாகக் காட்சியளிக்கும் உயர்ந்த கட்டடங்களைக் கொண்டு, வடக்கு மக்களின் வாழ்வு மேம்பட்டு விட்டதாகக் கணிப்பது அபத்தம்! வன்னியில் இன்றும் கூட அவலத்தில் உழல்கின்ற மக்கள்தான் வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற பயணத்துக்கு உண்மையான எடுத்துக்காட்டு!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது குற்றம் சுமத்தி விட்டு ஏனையோர் தப்பித்து விட முடியாது. அவர் சார்ந்த கட்சியினர் மற்றும் மாகாண சபையில் அரசியல் பிரதிநிதித்துவம் செய்தவர்களெல்லாம் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர்.


Add new comment

Or log in with...