தமிழ் கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றினால் மக்கள் அவலங்களையே சந்திப்பர் | தினகரன்

தமிழ் கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றினால் மக்கள் அவலங்களையே சந்திப்பர்

இனியும் மக்கள் ஏமாறக்கூடாது

கிடைத்த சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் தவறவிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் வடமாகாண சபையை கைப்பற்றுவர்களேயானால் மக்கள் இன்னும் பாரிய அவலங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

எனவே கிடைக்கவுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் இனியும் தவறவிடக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவித்துள்ளார்.

வடமராட்சி வடக்கு தொண்டமனாறு  கெருடாவில் மாயவர் கோவிலடி பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

வடமாகாணசபை அதிகாரத்தில் ஒன்றுமில்லை என்பதுடன் நாம் அதனை விளக்குமாறால் கூட தொட்டுப் பார்க்கமாட்டோம் என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின்னர் மாகாணசபை தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் அத் தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் வாக்குகளை அபகரித்து வெற்றிகளை தமதாக்கியிருந்தார்கள்.

அதிலும் குறிப்பாக வடமாகாணசபையின் ஆட்சி அதிகாரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைகளில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் விழுந்தடித்துக் கொண்டு அத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த போதிலும் அவர்கள் மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையுடன் செயற்படவில்லை என்பதை தற்போது அவர்களே ஏற்றுக்கொள்கின்றமையானது வேடிக்கையாகவே இருக்கின்றது.

அண்மையில் வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சிவஞானம் தமக்கு கிடைக்கப்பெற்ற மாகாணசபையின் 5 வருட ஆட்சி அதிகாரத்தை வீணடித்து விட்டோம் என்று கூறியிருந்ததையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதுமாத்திரமன்று யுத்த காலத்தில் எமது மக்கள் பட்ட அவலங்களையும் துன்பங்களையும், வலிகளையும் அறிந்திராத அல்லது தெரிந்திராத கொழும்பில் சுகபோக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்த நீதியரசர் விக்னேஸ்வரனை இறக்குமதி செய்து வடக்கு மாகாண முதலமைச்சராக்கியமையானது மிகப் பெரிய தவறு என்றும் கூட்டமைப்பினரே வெளிப்படையாக கூறி வருகின்றார்கள்.

இந்த நிலையில், வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில், மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக கிடைக்கும் செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் உரிய முறையில் பயன்படுத்தாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலத்திலும் மக்கள் வழங்கும் ஆணையை ஏற்று மக்களுக்காக பணிபுரிய தயாராக இருக்கின்றார்களா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. குறிப்பாக வடக்கு மாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில், 437 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக பெருமை பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன்சார்ந்த தீர்மானங்கள் ஒன்றையேனும் நிறைவேற்றாமல் போனமைக்கு அவர்களிடம் ஆற்றலும் அக்கறையும் இல்லாததே பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என்பதை மக்கள் இப்போது உணர்ந்துள்ளார்கள்.

எனவே எதிர்வரும் காலங்களில் மக்கள் எமக்கு அந்த ஆணையையும் அதிகாரத்தையும் தருவார்களேயானால் நாம் நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்பிற்கும் ஆவலுக்கும் ஏற்ற வகையில், வடக்கு மாகாணத்தை வளமுள்ள பிரதேசமாக மாற்றியமைப்பது மட்டுமன்றி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உழைப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...