இலங்கை மாணவன் மொஹமட் நிசாம்தீன் ஆஸியில் விடுதலை | தினகரன்

இலங்கை மாணவன் மொஹமட் நிசாம்தீன் ஆஸியில் விடுதலை

இலங்கை மாணவன் மொஹமட் கமர் நிசாம்தீன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய பொலிஸார் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, சிட்னி மத்திய உள்ளூர் நீதிமன்றத்தில், நேற்றுக் காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, குற்றச்சாட்டுகளை பொலிஸார் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய இவர், அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் சிலரை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அவுஸ்திரேலிய நியூ சவுத்வெல்ஸ் பொலிஸாரினால், கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் நிஷாம்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையினால் அவருக்கு, செப்டெம்பர் 29 ஆம் திகதியன்று பிணை வழங்கப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ,அரசியல் தலைமைகளை படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்காக திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே, தீவிரவாத குற்றச்சாட்டிலிருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...