சபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம் | தினகரன்

சபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்

பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு

ஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய கவிதா கோஷி மற்றும் ரெஹானா பாத்திமா இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதை அடுத்து ஐயப்பனைத் தரிசிக்க விரும்பிய மேரி ஸ்வீட்டி போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவருக்குத் தற்போதைய சூழலை விளக்கிய காவல்துறை, பாதுகாப்பு அளிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்தது. இந் நிலையில் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த புதன்கிழமை மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை சபரிமலைக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படும் நிலக்கல் பகுதியில் திரளாக நின்ற ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்து, அதில் இளம் பெண்கள் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

அதேபோல நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சன்னிதானத்தை நெருங்கிய இரண்டு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் அருகே சரணகோஷம் எழுப்பினர்.

18-ம் படியின் கீழ் அர்ச்சகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் பம்பைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் பம்பைக்கு வந்த 46 வயதான மேரி ஸ்வீட்டி, ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். அனைத்து மதங்களையும் தான் மதிப்பதாகவும் ஐயப்பனைக் காண வந்ததாகவும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து அவரிடம் பேசிய காவல்துறையினர், அவரின் பயணத்தைத் தாங்கள் தடுக்க மாட்டோம் எனவும் அதே நேரம் அவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேரி திரும்பிச் சென்றார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மேரி ஸ்வீட்டி ஷார்ஜாவில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...