கசோக்கி கொலை ஆதாரங்களை துருக்கியிடம் கேட்கும் அமெரிக்கா | தினகரன்

கசோக்கி கொலை ஆதாரங்களை துருக்கியிடம் கேட்கும் அமெரிக்கா

துருக்கியில் உள்ள சவூதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சவூதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள் என்று துருக்கியைக் கேட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது டிரம்ப் இதைத் தெரிவித்தார்.

ஒக்டோரபர் 2ஆம் திகதி இஸ்தான்பூலில் உள்ள சவூதி துணைத் தூதரகத்துக்குள் சென்றதில் இருந்து கசோக்கியைக் காணவில்லை. தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்றும், வந்த வேலை முடிந்து அவர் திரும்பிவிட்டார் என்றும் சவூதி அரேபியா கூறி வருகிறது.

இதனிடையே காணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோக்கி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ். மத்திய கிழக்கு நாடுகளில் சுதந்திரமான ஊடகத்துக்கான தேவை குறித்து அந்தப் பத்தியில் கசோக்கி வலியுறுத்தியுள்ளார்.

கசோக்கி பாதுகாப்பாக திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில், இந்த பத்தியை வெளியிடாமல் தாமதம் செய்ததாக அந்த நாளிதழின் உலக கருத்துப் பிரிவு ஆசிரியர் கரேன் ஆட்டியா தெரிவித்துள்ளார்.

“தற்போது அது நடக்கப்போவதில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். நான் கடைசியாக எடிட் செய்யும் அவரது கட்டுரை இது” என்று கூறிய அவர், “அரபு உலகத்தில் சுதந்திரம் நிலவவேண்டும் என்பதற்கு அவர் காட்டிய அக்கறையையும், ஆர்வத்தையும் இந்த பத்திக் கட்டுரை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. இந்த சுதந்திரத்துக்காகவே அவர் தமது உயிரைக் கொடுத்துள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அந்த கடைசி பத்தியில் “அரபு உலகம் தம்முடைய சொந்த இரும்புத்திரை சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்த இரும்புத்திரை வெளிநாட்டு சக்திகளால் உண்டானதல்ல.

அதிகார தாகத்தில் உள்நாட்டு சக்திகளே உருவாக்கியது. அரபு உலகத்துக்கு நவீனமான பன்னாட்டு ஊடகம் வேண்டும். இதன் மூலமே உலக நடப்புகளை குடிமக்கள் தெரிந்துகொள்ள முடியும். மிக முக்கியமாக, அரபு குரல்கள் ஒலிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்கவேண்டும்” என்று கசோக்கி எழுதியுள்ளார்.

தமது சக சவூதி எழுத்தாளர் சலே அல் சலே தற்போதைய சவூதி அரசாங்கத்தின் கருத்துக்கு மாறான கருத்தை எழுதியதற்காக தேவையில்லாமல் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட கசோக்கி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் காக்கும் மெளனம் விரைவில் கண்டனமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை சவூதி ஏவிவிட்ட நபர்கள் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்து விரலை துண்டித்து கொலை செய்ததாக துருக்கி புதிய புகாரை தெரிவித்துள்ளது.

துருக்கி அரசு பத்திரிக்கையான யேனி சபாக்கில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது,

“எங்களுக்கு கிடைத்துள்ள ஓடியோ ஆதாரங்கள்படி, சவூதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். 7 நிமிடங்கள் வரை இந்த சித்திரவதை நீண்டுள்ளது. பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரங்கள் சவூதி அரேபியா தூதர் முன்னிலையில் நடந்துள்ளது.

தூதரகத்தினுள் கொலை நடந்தால் தானும் சிக்கிக் கொள்வோம் என அஞ்சிய அவர் அதனை வெளியே சென்று செய்யுமாறு கூறுகிறார். மற்றொரு நபர் அவரை மிரட்டுகிறார். நாங்கள் கைப்பற்றியுள்ள வீடியோவில் இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளன” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த கொலையில் சந்தேகப்படும் 15 பேரில், மூன்று பேர் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் பாதுகாப்பு அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும், சவூதி அரச குடும்பத்தின் பாதுகாப்பு பணியில் உள்ள இருவர், சவூதி அரசுக்காக பணியற்றும் பிரேத பரிசோதனை நிபுணர் என தொடர்ந்து பலரும் சவூதி அரசுக்கு நெருக்கமான தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.


Add new comment

Or log in with...