நேவி சம்பத்திற்கு உதவிய நபருக்கு விளக்கமறியல் | தினகரன்


நேவி சம்பத்திற்கு உதவிய நபருக்கு விளக்கமறியல்

'நேவி சம்பத்' என அழைக்கப்படும்  கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி இலங்கையிலிருந்து  தப்பிச்  செல்வதற்காக உதவி ஒத்தாசை புரிந்த நபருக்கு, எதிர்வரும் நவம்பர் இரண்டாம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கப்பம் கோரும் நோக்கில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 17 பேரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம்  தொடர்பிலான பிரதான சந்தேகநபரான முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் நேவி சம்பத் என அழைக்கப்படும் பிரசாத் ஹெட்டியாரச்சி என்பவர், மறைந்திருக்கும் நோக்கில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்களை   தயாரித்தல் பணம் வைப்பிலிட்டமை அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  சந்தேகநபரான லக்சிறி அமரசிங்க எனும் சந்தேகநபரை நவம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 - 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை, ரவிராஜ் எம்.பி. கொலை தொடர்பான சந்தேகநபரான, 'நேவி சம்பத்' என அழைக்கப்படும்  கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி  தொடர்பான வழக்கு இன்று (19) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்

கொலை மற்றும் கடத்தல் போன்ற குற்றங்களை மேற்கொண்ட சந்தேகநபர்,  மறைந்திருக்க உதவி ஒத்தாசை புரிந்தமை, பணம் வைப்பிலிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கையின் தண்டனை சட்ட கோவைக்கு அமைய சந்தேகநபராக கருதப்படும் லக்சிறி அமரசிங்கவுக்கு  எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் சகோதரனுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இரண்டின் மூலம் ஹெட்டியாராச்சி எனும் பெயரில் குறித்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் ஹெட்டியாராச்சி எனும் சந்தேகநபர், குறித்த நிறுவனத்தில் சேவையில் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக, குற்றவியல் விசாரணை திணைக்கள (CID) பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா  நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கடற்படையில் தங்கியிருக்க உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, நீதவான் இதன்போது குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஒன்றரை மாதங்கள் கழிந்த போதும், சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு  உதவி புரிந்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன நீதிமன்றில் தெரிவித்தபோது, முன்னாள் கடற்படைத் தளபதி,  பாதுகாப்பு படை பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவை கைது   செய்வது தொடர்பில் போதிய காரணங்கள் உள்ளதாக, குற்றவியல் விசாரணை  திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன், எதிர்வரும் வாரம்  அவரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்தது.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

-சுபாஷினி சேனாநாயக்க


Add new comment

Or log in with...