Tuesday, April 23, 2024
Home » இலங்கை மக்களுடன் இந்தியா இணைந்திருப்பதை சுட்டிக்காட்டும் உயர் ஸ்தானிகரின் வட மாகாண விஜயம்

இலங்கை மக்களுடன் இந்தியா இணைந்திருப்பதை சுட்டிக்காட்டும் உயர் ஸ்தானிகரின் வட மாகாண விஜயம்

by Rizwan Segu Mohideen
December 4, 2023 5:18 pm 0 comment

உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே 2023 நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 01ஆம் திகதி வரை வட மாகாணத்துக்கான 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஸ்ட இராஜதந்திரிகளும் அவருடன் இணைந்திருந்தனர்.

இந்திய – இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையின் கீழ் இலங்கை மக்களின் நலன்களுக்காக ரயில்வே உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்துக்கு வலுவூட்டும் வகையில் இப்பேராளர்கள், இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிநவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த ரயிலில் கொழும்பிலிருந்து மதவாச்சிக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் அநுராதபுரம் முதல் தரமுயர்த்தப்பட்ட ரயில் பாதையில் பயணித்ததன் மூலமாக அந்த பயண அனுபவத்தை பெறுவதற்கும் குறித்த பயணம் வழிகோலியது. இந்திய கடனுதவியின் கீழ் மாஹோ முதல் ஒமந்தை வரையிலான ரயில் பாதையை தரமுயர்த்தும் பணிகள் பிரசித்திபெற்ற இந்திய-பொதுத்துறை நிறுவனமான IRCON முன்னெடுத்துவருகின்றது.

மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பரஸ்பரம் இணக்கம் காணப்பட்ட இடங்களிலிருந்து கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த இராஜதந்திரிகள் நவம்பர் 29 ஆம் திகதி தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள துறைமுக வளாகங்களில் பயணிகள் சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்டனர். 2023 ஜூலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்த இந்திய விஜயத்தின்போது, இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து தீர்மானித்த பொருளாதார ஒத்துழைப்பு நோக்கின் கருப்பொருளாக “தொடர்புகள்” அமைந்துள்ளமை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தினை விரைவில் கிரமமாக மேற்கொள்வதனை இலக்காகக்கொண்டு இரு அரசாங்கங்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விஜயத்தின் அங்கமாக உயர் ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திலுலள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலை தீவு ஆகிய மூன்று தீவுகளுக்கும் விஜயம் மேற்கொண்டு கலப்பு முறை புதுபிக்கத்தக்க சக்தி பொறிமுறையை நிர்மாணிப்பதற்கான முன்னாயத்தப்பணிகளை ஆய்வுசெய்தார். இத்தீவுகளில் வாழும் மக்களின் சக்தி தேவையினை பூர்த்தி செய்வதற்காக நன்கொடை அடிப்படையில் இவ்வாறான திட்டங்களை மேற்கொள்வதற்கான ஆதரவை வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.

சமூகத்தின் பல்வேறு பிரிவினரதும் பலவாறான தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மன்னார் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு 1000 பாடசாலைப் பைகளை வழங்கும் திட்டம் கிராமியப் பொருளாதாரத் துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ. காதர் மஸ்தான், அவர்களின் பிரசன்னத்துக்கு மத்தியில் நவம்பர் 29ஆம் திகதி முருங்கன் மகாவித்தியாலயத்தில் உயர் ஸ்தானிகரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் டிசம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு நிதியுதவித் திட்டத்தையும் உயர் ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார். மேலும், யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் அவரால் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் உள்ள மீனவர்களின் பயன்பாட்டிற்காக 15 கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உறை குளிரூட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், பாசையூரில் மீனவர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளுடன் உரையாடிய உயர் ஸ்தானிகர், வட மாகாணம் உட்பட இலங்கையில் மீன்பிடித் துறையின் வணிகரீதியானதும் ஸ்திரமானதுமான வளர்ச்சிக்காக விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவத்தின் பலன்களை பயன்படுத்தி அதன் மூலமான நன்மைகளை மீனவர்களுக்கும் . பொது மக்களுக்கும் நேரடியாகச் சென்றடைவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் அதி உயர் தியாகத்தை மேற்கொண்ட இந்தியாவின் வீரப்புதல்வர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையின் நினைவிடத்தில் டிசம்பர் முதலாம் திகதி உயர் ஸ்தானிகர் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கைக்கான தனது பணிக்காலத்தின் போது உயர் ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட பல விஜயங்களில் இறுதி விஜயமாக அமைந்த இவ்விஜயமானது, பிராந்திய மக்களின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் விஸ்தரிக்கப்பட்ட அபிவிருத்தி ஒத்துழைப்பு ஊடாக வடக்கு மாகாணம் உட்பட இலங்கை மக்களின் அபிவிருத்தி மற்றும் நல்வாழ்வுக்கான இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டுகின்றது.

இந்திய உயர்தானிகர் யாழ். தீவக பகுதிகளுக்கு விஜயம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT