ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை | தினகரன்

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் சதொச வழக்கிலிருந்து விடுதலை-Johnston Fernado Freed From the SATHOSA Case

 

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் கூட்டுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2013 வடமேல் மாகாண சபை தேர்தல் சமயத்தில் ஜூலை - செப்டெம்பர் இடைப்பட்ட காலத்தில், குருணாகல் சதொச நிறுவனத்திற்குரிய, யந்தம்பலாவ கிளையில் ரூபா 38 இலட்சத்திற்கும் அதிகமான (ரூபா 3,828,596) பெறுமதி கொண்ட பொருட்களை பணம் செலுத்தாது பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்ட மா அதிபரினால்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, அவரது அந்தரங்க செயலாளர் மொஹமட் ஷாகிர் மற்றும் சதொச முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்றைய தினம் (17)  குருணாகல் உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் மூவரினதும் சாட்சியம் பெறப்படாமலேயே, நீதிபதி மேனகா விஜேசுந்தர, அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் கடந்த செப்டெம்பர் 03 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டதோடு, கடந்த  செப்டெம்பர் 09 ஆம் திகதி  இடம்பெற்ற இறுதி வழக்கு விசாரணையின் போது  பிரதிவாதிகள் தொடர்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, தனது  கட்சிக்காரர்கள் மூவரையும் நிரபராதிகள் என அறிவித்து, விடுவிக்குமாறு  நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் அதி குற்றத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக இவ்வழக்கு விசாரணையை, மேற்கொண்டு நடத்த  முடியாது  என்பதாலும் சாட்சியம் பரஸ்பர விரோதமாக இருப்பதால் முறைப்பாட்டாளரின் சாட்சியம் நம்பிக்கையிலிருந்து  விலகியிருப்பதால், சாட்சியத்தை நிரூபிக்க முடியாதுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக் காட்டினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 200 ஆவது பிரிவிற்கு அமைய பிரதிவாதியின் சாட்சியை பெறாமலே இவ்வழக்கை நிறைவு செய்து பிரதிவாதிகளை நிரபராதி என அறிவித்து விடுவிக்குமாறு நீதிபதியிடம் அவர் விசேட கோரிக்கையை முன்  வைத்திருந்தார்.

பிரதிவாதியின் சட்டத்தரணிகள் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் இன்றைய தினம் (17)  தனது தீர்ப்பை  வழங்குவதாக குருணாகல் உயர் நீதிமன்ற நீதிபதி  மேனகா விஜேசுந்தர இதன்போது அறிவித்திருந்தார்.

பிரதிவாதிகளின் பிணை மனுக்களை நிராகரித்த நீதிமன்றம், குறித்த வழக்கு விசாரணையை கடந்த அக்டோபர் 03 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுப்பதாகவும், விசாரணை நிறைவடையும் வரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


Add new comment

Or log in with...