சவூதி மீதான அழுத்தம் அதிகரிப்பு; அமெரிக்க குழு மன்னருடன் பேச்சு | தினகரன்

சவூதி மீதான அழுத்தம் அதிகரிப்பு; அமெரிக்க குழு மன்னருடன் பேச்சு

ஊடகவியலாளர் காணாமல்போன விவகாரம்

காணாமல்போன சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி சென்று அந்நாட்டு மன்னர் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்மூலம் கசோக்கிக்கு என்ன ஆனது என்பது பற்றி விளக்கமளிக்க சவூதிக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்தான்பூல் துணைத் தூதரகத்திற்குள் நுழைந்தபோதே கசோக்கி கடைசியாக காணப்பட்டார். சவூதி முகவர்களால் கசோக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என்று துருக்கி அதிகாரிகள் சந்தேகிப்பதோடு இதனை சவூதி நிராகரித்து வருகிறது.

எவ்வாறாயினும், கசோக்கி மீதான குறுக்கு விசாரணையின்போது ஏற்பட்ட தவறால் அவர் உயிரிழந்ததை ஒப்புக்கொள்ள சவூதி தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே சவூதி நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து கடந்த திங்களன்று இஸ்தான்பூலில் இருக்கும் துணைத் தூதரகத்தில் துருக்கி பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சவூதி மன்னர் இடையே நேற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அதுபற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் நேற்று பின்னேரம் வரை வெளியிடப்படவில்லை. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட கருத்தை பொம்பியோ சவூதி மன்னரிடம் கூறுவார் என்று நம்பப்படுகிறது.

சவூதி மன்னருடன் தொலைபேசியில் பேசியது குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டரில், “சவூதி மன்னருடன் சற்று முன்னர் பேசினேன். தமது சவூதி பிரஜைக்கு என்ன ஆனது என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர் மறுத்தார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்துக் கூறிய அவர், “அந்த மறுப்பு மிக மிக பலமாக இருந்தது. அதனைப் பார்க்கும்போது இது முரட்டுத்தனமான கொலைகாரர்களின் வோலையாக இருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்?” என்றார்.

சவூதி மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் பலவீனம் ஏற்பட்டிருப்பது அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. சவூதியுடனான ஆயுத விற்பனையை ரத்துச் செய்வது குறித்து டிரம்ப் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தபோதும், இந்த மரணத்திற்கு சவூதி பொறுப்பு என கண்டறியப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

காணாமல்போன ஊடகவியலாளரை தேடுவதற்கு மன்னர் சல்மான் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டார். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என்றே சவூதி தொடர்ந்து கூறி வருகிறது.

நாட்டின் மீதான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை சவூதி கோபத்துடன் நிராகரித்து வருகிறது. தடைகள் போன்ற தண்டனை நடவடிக்கைக்கான பதில் நடவடிக்கை பெரிதாக இருக்கும் என்று அது எச்சரித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் சவூதியில் தங்கியிக்கும் காலத்தில் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து அவர் துருக்கிக்கு பயணமாகவுள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் சவூதி மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்த அனைத்து விடயங்களையும் சவூதி அரேபியா மற்றும் துருக்கி வெளியிட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பெச்லட் குறிப்பிட்டுள்ளார்.

துணைத் தூதரகத்தின் இராஜதந்திர தன்மை மற்றும் அதிகாரிகள் மீதான இராஜதந்திர அந்தஸ்த்து ஆகியன விசாரணையின்போது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே துருக்கியில் இருந்து கசோக்கியை கடத்திச் செல்லும் முயற்சி தவறி இருப்பது சவூதி அரேபியாவுக்கு தெரிந்திருப்பதாக பெயர் குறிப்பிடாத செய்தி மூலத்தை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை மற்றும் சி.என்.என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளன.

இதனாலே டிரம்ப் முரட்டுத்தனமான கொலைகாரர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சவூதி துணைத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட சவூதி குழு ஒன்றே இவ்வாறான கெலையில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த குழு சவூதி அனுமதி இன்றியே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சவூதி வாதாட வாய்ப்பு இருப்பதாக சி.என்.என் குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற ஆணைக்குழு ஒன்றால் விசாரிக்கப்பட வேண்டும் என்று சவூதி அரேபியாவில் உள்ள கசோக்கி குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன பின்னர் கடந்த திங்களன்றே துருக்கி புலன் விசாரணையாளர்களுக்கு அந்த கட்டடத்திற்குள் நுழைய அனுமதி கிடைத்தது. கைரேகை நிபுணர்களும் அவர்களுடன் சென்றிருந்தனர்.

மோப்ப நாயுடன், 10 அதிகாரிகள் கொண்ட துருக்கியக் குழு, நேற்றுக் காலை துணைத் தூதரகத்திலிருந்து வெளியேறியதாக நேரில் பார்த்தோரை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. அவர்கள் தம்முடன் துணைத் தூதரக தோட்டத்தில் இருந்து மண் உட்பட மாதிரிகளை எடுத்து வந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறிகின்றன.

கடந்த ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில் வசித்து வரும் ஜமால் கசோக்கி சவூதி அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வொஷிங்டன் போஸ்ட் பாத்திரிகைக்கு எழுதி வந்தார்.


Add new comment

Or log in with...