முதல் பலி வைரமுத்து அல்ல; முன்னாள் ஜனாதிபதி கிளின்டன்! | தினகரன்

முதல் பலி வைரமுத்து அல்ல; முன்னாள் ஜனாதிபதி கிளின்டன்!

இன்று இந்தியப் பெண்களின் பலமான வார்த்தை Me Too. எத்தனையோ இந்தியப் பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் உண்மைகளும் இருக்கின்றன, சில சுவாரஸ்யப் பொய்களும் இருக்கின்றன. எதை நம்புவது, எதை மறுப்பது என்றே தெரியாமல் முழிக்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு இந்த Me Too வைப் பகுத்தாராய்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது.

வைரமுத்துவை சமூகவலைத்தளங்கள் வறுத்தெடுக்கின்றன. பாடகி சின்மயி ME TOO ஊடாக வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் புகார் கூறியதையடுத்து இவ்விவகாரம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் பரபரப்பாகியுள்ளது. இக்குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என்பது தெரியவில்லை. வைரமுத்து மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்றும் ஒருசாரார் வாதிடுகின்றனர்.

இதுஒருபுறமிருக்க, 'மீ டூ'வை தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக 'வீ டூ' மென் (WE TOO MEN) என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் MeToo என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 'வீ டூ மென்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தைத் தொடங்கி உள்ளோம். இந்த இயக்கத்தில் நடிகர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். விருப்பத்தின் பேரில் ஆண்களுடன் சேர்ந்து பழகும் பெண்கள் மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகாரை கையில் எடுக்கின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் சில பெண்கள் செயல்படுகின்றனர்" என்று அந்த இயக்கத்தின் உறுப்பினரான திரைப்பட இயக்குனரும் பத்திரிகையாளருமான வாராகி கூறியுள்ளார்.

இதுபோன்ற புகார்களை அனுமதித்தால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்படும். எனவே, இதுபோன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆண்களுக்கான இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டதையடுத்து முக்கிய பெண்கள் பலரின் வண்டவாளங்கள் வெளிச்சத்துக்கு வருமென இதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இதுஒருபுறமிருக்க இந்த MeToo- இற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தான் முதல் பலி என்பது உண்மை. அவர்தான் பில் கிளிங்டன்!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிறந்து ஜனாதிபதியான முதல் நபர் இவர்தான். லண்டனுக்கு படிக்கப் போனவர் இவர். லண்டனுக்குப் பின் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் போது காதலித்து ஹிலாரியை கல்யாணம் செய்தார். அதன் பின்னர் டெமாக்ரெடிக் கட்சியில் சேர்ந்தார். அரகன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி, அரகன்ஸாஸ் மாகாண கவர்னர் என்றெல்லாம் பதவிகளை வகித்தவர். பின்னர் ஜனாதிபதியும் ஆகி விட்டார்.

ஜூலை 1995 இல் பில் கிளிண்டனுக்கு கெட்ட காலம் தொடங்கியது. அன்று தான் மோனிகா லெவின்ஸ்கி சம்பளம் இல்லாத ஊழியராக வெள்ளை மாளிகையில் சேர்கிறார்.

மோனிகா லெவின்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு வந்த உடனேயே அவள் அழகில் உருகிப் போனார் கிளிண்டன்.மோனிகா டிசம்பர் 1995இ-ல் கிளிண்டன் சிபாரிசில் நிரந்தரப் பணியாளர் ஆகிப் போனார்.

இதன் பின்னர் மோனிகாவை பெண்டகனுக்கு பணி மாற்றம் செய்தார்கள். அமெரிக்க விசுவாசிகள். ஆனால் மோனிகாவை அவ்வப்போது வெள்ளை மாளிகைக்கு வரவழைத்தார் கிளிண்டன்.

இந்த விடயங்கள் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.படத்தோடு தலைப்புச் செய்திகளாக பிரசுரமாகின. ரைம் பத்திரிகையில் அட்டைப் படமாகி வந்தது. இதில் வேடிக்கை என்ன என்றால் தன் மீது சுமத்தப்பட்ட பல குற்றங்களை மறுத்த கிளிண்டனால் மோனிகாவின் பாலியல் குற்றத்தை மறுக்க முடியவில்லை.

மோனிகா லெவின்ஸ்கி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கிளிண்டன் தன்னோடு தனிமையில் உல்லாசமாக இருந்த போது நடந்து கொண்ட விடயங்களை வெளிப்படையாகக் கூறினார். கிளிண்டன் அவற்றை அரைகுறையாக ஒப்புக் கொண்டார்.

மோனிகா லெவின்ஸ்கியின் கதை வெளியான பின்னர் பல பெண்கள் முன்வந்து தங்களை பில் கிளிண்டன் என்ன செய்தார் என்பதை உலகுக்குச் சொன்னார்கள்.

ஜுனைதா ப்ராட்ரிக் என்ற பெண் பில் கிளிண்டனால் 1970-களிலேயே பாலியல் தொடர்பு கொள்ளப்பட்டதாகச் சொன்னார். பவ்லா ஜோன்ஸ் என்பவர் 1991-இல் பில் க்ளிண்டனால் பாலிய ரீதியாக பாதிக்கப்பட்டதாகக் கூறினார். சட்டத்துக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி ஆனது.

கேத்லின் வில்லி என்பவர் 1993-இல் வெள்ளை மாளிகையிலேயே தன் மீது தவறாக நடந்து கொண்டதாக சொன்னார். இப்படி இன்னும் பலர் மோனிகா லெவின்ஸ்கி முன்வந்து சொன்னதால் தாங்களும் முன்வந்து எதிர் கொண்ட பிரச்சினைகளைச் சொன்னார்கள்.

இன்றைய ME TOO குற்றச்சாட்டுக்களைப் பார்க்கின்ற மோனிகா லெவின்ஸ்கி தான் முதல் MeToo தைரியப் பெண் என்று தெரிகிறது.

மோனிகா லெவின்ஸ்கியின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை "அதிகார துஷ்பிரயோகம் கிடையாது" என்று க்ளிண்டனின் மனைவி ஹிலாரி க்ளிண்டன் அப்போது பேட்டி கொடுத்திருந்தார். ஏனென்றால் மோனிகாவின் ஒத்துழைப்பு இல்லாமல் தவறு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதே பலரின் வாதமாக இருந்தது.

இன்று வைரமுத்து மீதான குற்றச்சாட்டு தொடர்பாகவும் பலர் அவ்வாறுதான் கூறுகின்றனர். வைரமுத்து மீதான புகழைக் கெடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இதுவென்கின்றனர் அவர்கள். இத்தனை காலம் இருந்து விட்டு இப்போது ஏன் குற்றச்சாட்டு கூற வேண்டும்? ஒருவர் குற்றம் சாட்டிய பின்னர் அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு ஏன் குற்றச்சாட்டு முன்வைக்க ​வேண்டும்?

இவையெல்லாம் தவிர்க்க முடியாத வினாக்கள்!

(ONE INDIA TAMIL)


Add new comment

Or log in with...