பிஞ்சு உள்ளங்களை வருத்தும் இம்சை! | தினகரன்

பிஞ்சு உள்ளங்களை வருத்தும் இம்சை!

புலமைப்பரிசில் பரீட்சை மாணவருக்கு அவசியமா?

தரம்_5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து பத்து தினங்களாகி விட்டன. சித்தியடைந்தவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கின்றனர். 80புள்ளிகள் பெற்றும் சித்தியடையத் தவறியோர் மனவிரக்திக்குள்ளாகியுள்ளனர். இது பலவித எதிர்மறைத் தாக்கங்களை பாதிக்கப்பட்ட மாணவர் உள்ளத்தில் மாத்திரமின்றி சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

வழமை போல வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுகின்ற நிகழ்வுகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. கற்பித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகள், சந்தோசங்கள் வழங்கப்படுகின்றன.சித்தியடைந்த மாணவர்களின் புகைப்படங்களை கட்அவுட் வைத்துப் பாராட்டும் காரியங்களும் நடைபெறுகின்றன. கூடவே பல அதிபர்களதும் ஆசிரியர்களதும் தலைகள் உருளுகின்றன.காரணம் அவர்களது பாடசாலையில் பெறுபேறு நன்றாக இல்லை. பலர் நட்பாகின்றனர், பலர் எதிரியாகின்றனர்.

ஊடகங்களும் இவற்றையெல்லாம் காட்சிப்படுத்துகின்றன. இவையெல்லாம் அவசியம்தானா என்ற கேள்வியும் மக்கள் மத்தியிலிருந்த எழுகின்றது.

இம்முறை இலங்கையில் 3 இலட்சத்து 50ஆயிரத்து 191 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 36ஆயிரத்து 144பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.அதாவது 10.32வீதமானோர் தகுதி பெற்றுள்ளனர்.

இப்புலமைப்பரிசில் பரீட்சையின் நோக்கங்கள், இலக்குகள் ஒன்றும் தெரியாததொன்றல்ல.

இப்பரீட்சையானது இரு நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.

1. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மாணவர்களுக்கு ஒரு உதவித் தொகை வழங்குதல்.

2. பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு வளமுள்ள நகரப் பாடசாலையில் இடஒதுக்கீடு செய்தல்.

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மொத்த மாணவர்களில் 10 சதவீதமானவர்கள் மட்டுமே வெட்டுப் புள்ளியின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படுகின்றனர். இதன் காரணமாகவே விலைவாசி போல ஒவ்வொரு ஆண்டும் வெட்டுப்புள்ளியும் அதிகரித்துச் செல்கிறது .

இந்த இரு நோக்கங்களும் இப்பரீட்சையினூடாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதையிட்டு முதலில் சிந்திக்க வேண்டும். சமூகத்தில் இப்பரீட்சை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது என்பது மட்டும் உண்மையாகும்.

இப்பரீட்சை தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபங்களை கல்வித்திணைக்களம் அமுல்படுத்த வேண்டும். சித்தியடைந்த மாணவர்களை காட்சிப்படுத்துதல், ஆயிரக்கணக்கில் பணம் அறிவிட்டு அன்பளிப்பு வழங்குதல் என்பவை நிறுத்தப்பட வேண்டும்.சித்தியடையத் தவறிய 90வீதமான பிள்ளைகளையிட்டு உளரீதியாகச் சிந்தித்தால் இது விளங்கும்.

இலங்கையிலுள்ள ஒரு பிரபலமான உளவள வைத்திய நிபுணர் ஒருவர் கருத்துரைக்கையில் "இப்பரீட்சை கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். இதனால் மாணவர்கள் உளநோயாலும் மனஅழுத்தத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றர்கள்.அதை விட பெற்றோர் பாதிக்கப்படுகின்றார்கள்" எனக் கூறியுள்ளார்.

அதைவிட முக்கியமானதொன்றை அவர் கூறியுள்ளார். அதாவது இப்பரீட்சையால் யார் இலாபமடைகின்றார்கள் என்பதே அது.பரீட்சைக்கு முன்பு ஆசிரியர்களும் பரீட்சைக்குப் பின்பு வைத்தியர்களும் பலனடைகின்றார்கள் அல்லது இலாபமடைகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இது உண்மை.

பரீட்சை என்ற சொல்லை வைத்து முதல் இரு வருடங்களும் (தரம்4, தரம்5) வகுப்புகளுக்கு விசேட வகுப்பு செயலட்டை என்றெல்லாம் மனசாட்சியே இல்லாமல் ஆயிரக்கணக்கில் பணம் சுருட்டப்படுகின்றது.

இப்பரீட்சையில் சித்தியடைபவர்களில் பெரும்பாலானோர் வசதி கூடிய குடும்பப் பிள்ளைகள். சித்தியடைந்த மாணவர்கள் கூட வளம் கூடிய பிரபல பாடசாலகளில் பயில இந்த 500 மானியம் நியாயமானதா? தற்போது 750 ருபா என்பது வேறு விடயம். மாதமொன்றுக்கு இந்த 500ரூபா புலமைப்பரிசில் தொகை போதுமானதா என்பதையிட்டு சிந்திக்க வேண்டும். பல தசாப்த காலத்திற்குப் பிறகு இத்தொகை இம்முறை 750 ருபாவாக மாறியிருக்கிறது. புலமைப்பரிசிலை அவமானப்படுத்தும் தொகையாகவே இதனைப் பார்க்க வேண்டிள்ளது.

இத்துணை கடினமான பரீட்சையொன்றில் சித்தியடைவதொன்றும் சாமானியமானதல்ல. அதனையும் எமது பிள்ளைகள் எதிர்கொண்டு சாதனை படைக்கிறார்கள்தானே?ஆரம்பப் பாடசாலையின் வளர்ச்சிச் சுட்டி இதுதானே? 5ஆம் தரத்தில் மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் எவ்வாறு ஆரம்பத் தரத்தை மதிப்பீடு செய்வது?

இவ்வாறான வினாக்களெல்லாம் இன்னொரு பக்கம் எழுகின்றன.வரலாற்றில் 2010இல் அம்பாறை மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி மாலவன் சுபதா தேசியரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருந்தார். அதன் பிறகு

அத்துணை சாதனையை இதுவரை யாரும் படைக்கவில்லை. இம்முறை வெட்டுப்புள்ளியும் சுமார் 10ஆல் அதிகரித்திருக்கிறது. அந்தளவிற்கு மாணவர்கள் எழுதியிருக்கிறார்கள். போகிறபோக்கில் 190 ஐ அண்மிக்கும் என்று கூறினால் பரீட்சையின் தரத்தையிட்டு சிந்திக்க வேண்டி வரும்.

சரி, இம்முறை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற இலங்கையிலுள்ள 99 வலயங்களுள் யாழ்ப்பாணம் வலயம் முதலிடத்தில் உள்ளது. யாழ்.வலயத்தில் 2789 மாணவர்கள் தோற்றியதில் 537 மாணவர்கள் அதாவது 19.25 வீதமானோர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

இதற்கடுத்ததாக வடக்கு,கிழக்கைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு வலயம் 2149 பேர் தோற்றியதில் 320 பேர், அதாவது 14.89 வீதமானோர் சித்தியடைந்து தேசியரீதியில் அவ்வலயம் 10 வது இடத்தை அடைந்துள்ளது.

"அன்று நாங்கள் புலமைப்பரிசிலுக்கு தோற்றுவதற்கு முன்பு காரைதீவில் எங்களைக் கற்பித்த திருமதி சௌந்தரமாக்கா வினாயகமூர்த்தி அவர்களின் வீட்டிற்குச் செல்வோம்.தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை மாத்திரம்(அன்று அப்படித்தான். அனைத்து மாணவர்களும் தோற்றுவதில்லை) வீட்டிற்கு அழைத்து தேநீரும் தந்து கற்பித்தார். சன்மானமாக 5 சதக்காசும் பெற்றதில்லை. நாம் ஒரு மாதமளவில் வீட்டில் கற்று கல்முனை சென்று பரீட்சைஎழுதி 5பேர் சித்தியடைந்தோம்.

இதையிட்டும் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. ஊடகங்களும் அலட்டியதில்லை.நாமும் அலட்டியதில்லை" என்று கூறுகிறார் காரைதீவைச் சேர்ந்த ஒருவர்.அவர் இன்று உயர் பதவி ஒன்றில் இருக்கின்றார்.

ஆனால் இன்றைய நிலைமை தலைகீழ். இது விரக்தியான கலாசாரத்தினை தோற்றுவித்து வருகின்றது. மாணவர் வயது குறைவாக உள்ளது. இல்லாவிடில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்திருக்குமென ஒரு மருத்துவர் கூறுகிறார்.

வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களும் இதே போன்று பணம் செலுத்தி கற்பித்த ஆசிரியர்களுக்கு பெருந்தொகைப் பரிசும் விருந்தும் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

பிரத்தியேக வகுப்பில் மாதமொன்றுக்கு ஒரு மாணவனிடம் 1000 ரூபா வீதம் ஆசிரியர் அறவிடுகின்றனர். இவர்களுக்கும் பாராட்டு அன்பளிப்புதேவையா என்ற வினாக்களையும் பெற்றோர் தொடுக்காமலில்லை.

பாடசாலையில் கற்பித்த ஆசிரியரா, ரியூசனில் கற்பித்த ஆசிரியரா வெற்றிக்கு உரிமை கோருவதென்பதிலும் முரண்பாடுகள் நிலவுகின்றன. புலமைப்பரிசில் பரீட்சையில் கூடுதலாக சித்தியடைந்து விட்டால் அந்த பாடசாலையும் உரிமை கோருகின்ற அதேவேளை ரியூட்டரிகளும் உரிமை கோருகின்றன.பதாகைகள் பறக்கின்றன. அந்த மாணவனைப் பற்றியோ பெற்றோரைப் பற்றியோ யாரும் சிந்திப்பதில்லை. அந்த மாணவன் எடுத்த முயற்சியும் பயிற்சியும் என்பதை அத்தருணத்தில் இவர்கள்மறந்து விடுகின்றார்கள்.

பெற்றோராக மனமுவந்து ஏதாவது வழங்குவதென்பது தவிர்க்க முடியாதது. ஆனால் ஆயிரக்கணக்கில் அறவிட்டு தங்கச்சங்கிலி, தங்கக்காப்பு வழங்குவதென்பது சிந்திக்க வேண்டிய விடயம். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் சுற்றுநிருபத்தை அமுல்படுத்த வேண்டிய அதிபர்கள், கல்வி அதிகாரிகளுக்கு முன்னிலையிலேயே இவை வழங்கப்படுகின்றன. அவர்களுக்கும் ஒரு பொன்னாடை. இந்தக் கலாசாரம் தொடர்கிறது.

பாடசாலைகளில் நிதி அறிவிடுவது,புலமைப்பரிசில் சித்தி பெற்றவர்களின் படங்களைக் காட்சிப்படுத்துவது கூடாது என்று கல்வியமைச்சு சுற்றுநிருபங்கள் கூறுகின்றன. ஆனால் அவை வெறும் சுற்றுநிருபங்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறையில் இல்லை என்பது பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாகும்.

கல்வியமைச்சு இந்த விடயத்திலும் தலையிட்டு ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

இலவசக்கல்வி என்று கூறி விட்டு இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது கண்டும் காணாமலிருப்பது எதிர்காலத்தில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என பெற்றோர் அஞ்சுகின்றனர்.

பரீட்சையில் தவறி விட்ட மாணவர் சிலர் பாடசாலைக்குச் செல்ல மறுத்த சம்பவத்தை அண்மையில் பத்திரிகையில் அறிய முடிந்தது. ஆசிரிய தலையங்கம் கூட எழுதப்படும் நிலைக்கு இப்பரீட்சை வந்திருக்கிறதென்றால் இன்னமும் தாமதிக்க முடியாது என்ற செய்தியினை இப்பரீட்சை உணர்த்தி நிற்கிறது. இதனை உளவியலாளர்களும் கல்வியியலாளர்களும் தொடர்ச்சியாக கூறி வருகின்ற இந்நிலையில், இன்னும் இதனை மாற்றியமைக்க முற்படாதது குறித்து விசனம் தெரிவிக்கப்படுகின்றது. புத்திஜீவிகளையோ சிந்தனைவாதிகளையோ அடையாளப்படுத்தும் பரீட்சை இதுவல்ல என்பதை விளங்குதல் வேண்டும் .

இன்றைய முகநூலில் வெற்றி பெற்ற மாணவர்கள் சார்பாக உறவினர்களும் பாடசாலைச் சமூகமும் பாரிய வெற்றிக் களிப்பில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. உண்மையில் கல்விப் புலத்தில் கருமம் ஆற்றுவோர் கூட சித்தி அடையாத 90 சத வீத மாணவர்களின் உள ரீதியான நெருக்கீடு பற்றி கொஞ்சமேனும் கவலை கொள்வதில்லை.

உண்மையில் இத்தனை ஆண்டு கால இலங்கையின் கல்வி வரலாற்றின் அனுபவம் என்னவென்றால் 10 வீதம் சித்தியடைந்த மாணவர்களில் 4 வீதத்தினர் மட்டுமே க.பொ.த சா/த பரீட்சையில் தேர்வு அடைகின்றனர். உயர்தரப் பரீட்சையில் அது 2 வீதமாக வீழ்ச்சி அடைகிறது .

கீழைத்தேய மக்களின் பழக்கங்களில் ஒன்று எதனையும் விமர்சனம் செய்வது, குற்றம் சாட்டுவது. ஆனால் பரிகாரம் சொல்வதில்லை. ஆனால் அதற்கு விதிவிலக்காக இப்பரீட்சையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற பொறிமுறையொன்றை முன்வைப்பது மிகவும் பொருத்தமாகும். இப்பரீட்சையின் முதல் நோக்கத்திற்காக அதாவது வசதி குறைந்த மாணவர்களுக்கு உபகாரப் பணம் வழங்குவது என்பதற்காக ஒரு பரீட்சையும் பெரிய பாடசாலையில் பயில வேண்டுமென்பதற்காக பிறிதொரு பரீட்சையும் நடாத்தப்பட வேண்டும்.

ஆனால் ஒரு மாணவன் ஒரு பரீட்சைக்கு மாத்திரமே தோற்ற வேண்டும். இந்த இடத்தில் வசதி குறைந்த என்ற பிரிவினை மாணவர் மத்தியில் ஏற்றத்தாழ்வை, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாதா என பெற்றோர் வினாவலாம்.

உண்மையில் மேற்படி பரீட்சையில் சித்தியடையத் தவறும் 90வீதமானோர் அடையும் உளத்தாக்கத்தினை விட இது குறைவாகத்தான் தோன்றும். ஏன் மாகாண தேசிய பாடசாலைகளிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை நாம் அறியாதவர்களா?

கல்விக் கல்லூரிகளில் மெரிட் சித்தி பெற்றவர்களை தேசிய பாடசாலையிலும் ஏனையோரை மாகாணப் பாடசாலைகளிலும் நியமித்தமை அவர்களிடையே இந்த தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தாதா?

ஒரு மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட முதற் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுள் 10 வீதமானவர்களை தேர்ந்தெடுக்கும் போது அனைவரும் பயன் பெறுவார்கள். புலமைப்பரிசில் பரீட்சையும் அதன் நோக்கத்தை அடையும்.

2வது பரீட்சையில் 5வீதமானோரைத் தெரிவுசெய்கின்ற பட்சத்தில் அவர்களுள் முடியுமானோர், விரும்புவோர் பெரிய பாடசாலைகளை நாடச் சந்தர்ப்பமுண்டு. மொத்தமாக 15வீதமானோர் உள்ளனர்.தற்போது அரசாங்கம் எதிர்பார்க்கின்ற 15வீதமும் பூர்த்தியாகும். அதேவேளை 5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் "ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையென்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை.

அது நினைவூட்டலை பரீட்சித்துப் பார்க்கும் பரீட்சையாகும். எனினும் இப்பரீட்சைதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றது என எண்ணி மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் கொடுக்கின்றனர்" எனக் கூறுகிறார்.

எனவே இப்பரீட்சை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அது மறுசீரமைப்புக்குட்படுத்தப்படவேண்டும். இப்பரீட்சையை இரத்துசெய்ய வேண்டும் என சிலர் கூறுகின்றனர். எதுஎப்படியோ இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். எனவே இந்த வருடத்துடனாவது இந்த கலாசாரத்தினை மாற்றி புதிய கலாசாரத்திற்கு கல்வியமைச்சும் கல்வியிலாளர்களும் அரசாங்கமும் முயற்சிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...