பேஸ்புக் ஒன்றுகூடல்; 12 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கைது | தினகரன்

பேஸ்புக் ஒன்றுகூடல்; 12 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கைது

பேஸ்புக் ஒன்றுகூடல்; 12 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கைது-Facebook Party-36 Arrested Including 12 Women

 

இருவரிடமிருந்து ஐஸ், கஞ்சா, விஷ மாத்திரைகள் மீட்பு

பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று  ஒன்றுகூடலில் கலந்துகொண்டோருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து 36 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, துரகந்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற குறித்த  ஒன்றுகூடலில் கலந்து  கொண்டோருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பில், இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசார் அங்கிருந்த 12 பெண்கள் மற்றும் 20 ஆண்களை  கைது செய்துள்ளதாக,  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது  செய்யப்பட்டோரில், ஹெந்தளை, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞர்  ஒருவரிடமிருந்து 530 மில்லி கிராம் ‘ஐஸ்’ (Methamphetamine) எனப்படும் போதைப் பொருளும் 04 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும், போபுவல, களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரிடமிருந்து  விஷ மாத்திரைகள் 04 மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள்  இருவரையும் இன்றைய தினம் (15) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய சந்தேகநபர்கள் அனைவரிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர்களது சுய விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின், அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டோர், 20 - 30  வயதுக்கு இடைப்பட்ட, இரத்தினபுரி, களுத்துறை, கல்கிஸ்ஸை, குருணாகல், மாத்தறை, வத்தளை, மொணராகலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள என  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...