வாசிப்புப் பழக்கத்திலிருந்து தூர விலகும் இளைய தலைமுறை | தினகரன்

வாசிப்புப் பழக்கத்திலிருந்து தூர விலகும் இளைய தலைமுறை

வாசிப்பு மூலம் நாம் அனைத்து விடயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். நாம் நம் வாழ்நாள் முழுவதும் வாசித்து அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். வாசிப்பு அறிவை வளர்க்கும். அதற்கு பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு இருக்க வேண்டும். வாசிப்பு ஒரு மனிதனை அறிவார்ந்தவனாகக் கட்டமைக்கின்றது. வாசிப்பே ஒருவரின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கின்றது.

அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய மகன் கற்ற பாடசாலை அதிபருக்கு எழுதிய புகழ் பெற்ற கடிதத்தின் ஓரிடத்தில் 'அதிபர் அவர்களே... இயலுமானால் நூல்களிலுள்ள இலக்கிய சுவையினைப் பற்றி எனது புதல்வருக்கு எடுத்துக் கூறுங்கள்' என்று எழுதியிருந்தார். ஏனென்றால் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்ற முக்கியமான நான்கு திறன்களில் வாசிப்பும் ஒன்றாகும்.

தான் பேசுகின்ற மொழியில் எந்தவொரு விடயத்தையும் செயற்பாட்டையும் மேற்கொள்வதாக இருந்தால் அங்கே செவிமடுத்தல் அவசியமாகும். செவிமடுத்தலானது பேசுவதற்குரிய திறனை வழங்குகின்றது. பிள்ளை பிறந்துபேசக் கற்றுக்கொள்கின்ற பருவத்தில் தாயினதும், தந்தையினதும், உறவினர்களினதும் மொழிப்பயன்பாடுகள் அந்தக் குழந்தையின் பேச்சாற்றலுக்கு துணையாகின்றன.

அதேபோன்றுதான் குழந்தையைச் சுற்றியுள்ளவர்கள் எவ்வாறு பேசுகின்றார்களோ அதனைத்தான் அந்தக் குழந்தையும் பேசும்.

அதனால்தான் குழந்தைகளிடம் பேசுகின்றபோது நல்ல, தெளிவான முறையில் பேச வேண்டும். குழந்தைகள் ஆரம்பத்தில் தாயின் மடியிலிருகின்ற போது தாய் பேசுகின்ற விடயங்களை நன்கு அவதானிக்கின்றன. அதனை மீண்டும் கூறுவதற்கு எத்தனிக்கின்றது. அங்கே ஏற்படுகின்ற தொடர்பாடல் பேசுவதற்கு வழிவகுகின்றது.

பின்னராக காலத்தில் எழுதக் கற்றுக்கொண்ட பிள்ளைகள் வாசிப்பின் ஊடாக மொழியின் செழுமையை பேணுகின்றன. அதிகமாக வாசிக்கின்ற போது மொழி விருத்தியுற்று தேர்ச்சியடைகின்றது. இந்தத் தேர்ச்சியானது பிள்ளையின் மொழிப் பயன்பாட்டிற்கும் உதவுகின்றது.

இவ்வாறாக மொழியின் சிறப்பினை மேம்படுத்துவதில் வாசிப்புக்கு முக்கிய பங்கிருப்பதை காணலாம். பாடசாலைக் காலங்களில் குறிப்பாக ஆரம்பக் கல்விப் பருவத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள். நூல்களையும் பாடப்புத்தகங்களையும், சொற்களையும் வாசிக்கச் செய்வதைக் காண்கின்றோம்.

அந்த வாசிப்பானது மாணவர்களுக்கு விருப்பமான முறையில் அமையாத போது பிள்ளைகள் சோர்விழந்து வெறுப்புற்றுக் காணப்படுவர். இதற்கு மாற்றமான முறையில் வாசிப்பினை ஆர்வத்துடன் பிள்ளைகள் வாசிக்கச் செய்வதற்குரிய ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் மேற்கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல மாணவர்களை கையாளுகின்ற ஆசிரியர்களில் இன்று எத்தனை வீதமானவர்கள் நாளாந்த பத்திரிகைகளைப் பார்க்கின்றார்கள். அதுவும் மிகமிகக் குறைவுதான்.அதுமட்டுமன்றி வகுப்பறைகளில் ஆசிரியர் அறிவுரைப்படி வழிகாட்டி நூலிலுள்ள விடயங்களைக் கூட வாசிக்காமல் நிறையப்பேர் கற்பிக்கின்றனர்.

இன்று பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள் போன்றவைகள் மாத்திரமன்றி நவீன தொடர்பூடகங்கள் கைக்குள் காணப்படுகின்றன.

அதில் வருகின்ற செய்திகளையாவது முழுமையாக வாசிப்பதற்கு கூட நேரமில்லாமல் தலைப்புச் செய்திகளையும் அறைகுறையுடன் வாசிக்கின்ற கேட்கின்ற ஒரு நிலைமை இன்று உள்ளது.

உண்மையில் வாசித்தலில் இடர்பாடுகின்ற மாணவர்கள் சாதாரணமாக ஒவ்வொரு வகுப்பிலும் விரல்விட்டு எண்ணக் கூடியவாறு காணப்படுகின்றனர். இன்று தரம் ஐந்து புலமைப்பரீட்சைப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெறுகின்ற மாணவர்களது பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இலகுவான வினாப்பத்திரங்களை கொண்டிருந்தாலும் வாசித்து அறிந்து கொள்ளும் நிலையில் அந்த மாணவர்கள் காணப்படுவதில்லை.

ஐந்து ஆண்டுகள் பாடசாலையில் கற்று விட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பத்து இருபது புள்ளிகளைப் பெறுகின்றார்கள் என்றால் இதற்குக் காரணம் யார் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

வாசிப்பினை ஆரம்ப வயதிலிருந்து மேற்கொள்வதற்கான நடைமுறைகளை குறைந்தது பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் இன்று பாடசாலைகள் உள்ளன. ஆசிரியர்களும் பொறுப்புக் கூற வேண்டியவராக உள்ளனர். இம்மாதத்தில் மாத்திரம் பாடசாலைகள் தமது மாணவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான நூல்கனை ஒன்று சேர்க்கின்றன.

ஆனால் அவ்வாறு ஒன்று சேர்க்கின்ற நூல்கள் அனைத்தும் அலுமாரிகளில் உறங்கிக் கிடக்கின்றன. ஒருசில நூல்களை மாத்திரம் மாணவர்களில் சிலர் பயன்படுத்துவர். மற்றவர்கள் எல்லோரும் பாடசாலை நூலகத்தை ஒரு ஓய்வைக் கழிக்கின்ற, வெட்டிப் பேச்சுபேசுகின்ற ஒரு இடமாகவே பயன்படுத்துவதையும் காண்கின்றோம்.

வேலைப்பளு அதிகரித்துக் கொண்டு செல்கின்ற கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மிடையே வாசிப்பும் ஒரு முக்கியமான விடயமாக இருப்பது யாருக்கும் தெரிவதில்லை. மற்றவர் சொல்லக் கேட்கும் நேரம், அரட்டை அடிக்கும் நேரம், காரியாலயத்தில் வேலையற்று இருக்கும் நேரங்களிலாவது தினம் ஒரு பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் எமது சந்ததிகளுக்கும் அந்தப் பழக்கத்தினை ஏற்படுத்த முடியும்.

கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு பகுப்பாய்வின்போது வெளியிடப்பட்ட கூற்றின் பிரகாரம் தான் பேசுகின்ற மொழிப்பாடத்தில் க.பொ.சா.தரத்தில் சுமார் 10 வீதமான மாணவர்கள் குறைவான புள்ளிகளைப் பெற்று சாதாரண சித்தியைக்கூட பெறமுடியாமலாகினர்.

அப்படியானால் பதினொரு ஆண்டுகள் அந்தப்பிள்ளை பாடசாலையில் என்ன செய்தது? தன்னுடைய மொழியில் பற்று வைத்து படிக்கவில்லையா? வாசித்து விளங்கக் கூடிய நிலையில் மாணவர்கள் காணப்படவில்லை என்பது தான் உண்மையான விடயமாகும். எங்கு பிழையிருக்கின்றது என அக்குழந்தைகளின் பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கூட கவனமெடுக்காத நிலைமை மிகவும் கவலை தரும் விடயமாகும்.

நாளைய உலகில் சிறந்த நற்சந்ததிகளை உருவாக்க விளையும் பாடசாலைகளில் சரியான முறையில் மாணவர்கள் தன்னுடைய மொழியில் சோபிக்கவில்லை என்றால் எந்தப் பாடத்திலும் அவர்கள் சரியான முறையில் கற்கமாட்டார்கள் என்பது புரிந்திருந்தும் மொழியில் அவர்களுக்கான பரிகாரத்தினை காண்பதிலிருந்து தவறிவிடுகின்றோம் என்பதைத்தான் இது காண்பிக்கின்றது. தான் பேசுகின்ற தாய்மொழியை எழுதவோ, வாசிக்கவோ தெரியாமல் இருப்பதானது வேதனைக்குரிய விடயமாகும்.

கல்விக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி, புதிய புதிய மாற்றங்கள் பற்றிய பயிற்சி, கற்கை முறைகளிலும் பரிகார கற்பித்தலிலும் பயிற்சிகள், கற்றல் உபகரணங்களுடன் கற்பித்தல் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் போன்ற எதனையும் காதில் போட்டுக் கொள்ளாது தான் இப்படித்தான் கற்பிப்பேன் என்கின்ற நிலையில் பல ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். இதன் போது மொழியில் செழுமை ஏற்படுத்தத்தான் முடியுமா? வாசிப்பினை சரியான முறையில் கொண்டுசெல்ல முடியுமா?

எனவே, மாணவர்கள் வாசிப்பில் குறைவான அடைவினைக் காண்பிப்பார்களாகயிருந்தால் தான் பேசுகின்ற மொழிகூட இறந்த மொழியாகி விடும். அந்த வகையில் நாம் பேசுகின்ற தமிழ் மொழிகூட இறந்து கொண்டிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

மொழியின் செழுமையை மேம்படுத்தவேண்டுமாக இருந்தால் வாசிப்பு அங்கே பூரணமாக இருக்கவேண்டும்.

முடிவாக புத்தக வாசிப்பு மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும். வாசிப்புப் பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் ஒரு பாலமாக இருந்து அறிவைக் கடத்துகின்ற செயலைச் செய்கின்றது.

நம்முடைய வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், கண்டுபிடிப்புகள் போன்றவற்றை நாம் வாசிப்பின் மூலம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்றோம். நம்மிடமிருந்து எதிர்காலத் தலைமுறையினர் வாசிப்பின் மூலம் பெற வேண்டும். அதற்கு நாம் வாசிப்பை நேசிப்பதோடு நம் சந்ததிகளுக்கும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

சி.அருள்நேசன்
கிழக்குப் பல்கலைக்கழகம்)


Add new comment

Or log in with...