Thursday, April 18, 2024
Home » மூன்று மாநிலங்களில் பா.ஜ.க பெருவெற்றி!

மூன்று மாநிலங்களில் பா.ஜ.க பெருவெற்றி!

by damith
December 4, 2023 6:00 am 0 comment

இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்றுள்ள சட்டசபைக்கான தேர்தல்களில் நேற்றுமாலை வரை வெளியான முடிவுகளின்படி மூன்று மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக கட்சி மாபெரும் வெற்றியீட்டியுள்ளது.

ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்றுமாலை வெளியாகின. இவற்றில் 3 மாநிலங்களில் பா.ஜ.க மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலேயே பாரதீய ஜனதா வெற்றிபெற்றுள்ளது.

அதேசமயம் தெலுங்கானாவில் காங்கிரஸ் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. மிசோராமில் நேற்று வாக்கு எண்ணிக்கை செய்யப்படவில்லை. அங்கு இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.

சட்டசபைத் தேர்தல்கள் தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களிலேயே நடைபெற்றிருந்தன.

மத்திய பிரதேசத்தில் பாஜக 164 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அறுதிப்பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்கள் போதும். ஆனால் பா.ஜ.க 164 இடங்கள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.

அங்கே சாதாரண வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது.

அதேபோல் ராஜஸ்தானில் பா.ஜ.க 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 200 இடங்களில் அறுதிப்பெரும்பான்மை பெறுவதற்கு 101 இடங்கள் போதும். ஆனால் பா.ஜ.க 109 இடங்ளை வென்றுள்ளது.

சத்தீஸ்கரில் பாஜக 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 32 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. அம்மாநிலத்தில் முன்னிலை பெற 90 இடங்களில் 46 இடங்கள் போதும். ஆனால் பா.ஜ.க 57 இடங்களை வென்றுள்ளது.

நேற்றுமாலை வாக்குகள் எண்ணப்பட்டு இறுதிமுடிவுகள் வெளிவராத நிலையிலேயே இந்த வெற்றிகள் கிடைக்கப் பெற்றன. இறுதி முடிவில் ஓரிரு ஆசனங்கள் மாற்றமாக வந்தாலும் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றியீட்டியிருப்பது நேற்றுமாலை உறுதியாகியது.

தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் பா.ஜ.க-வுக்கு இருக்கும் செல்வாக்கும், அமைப்பு ரீதியான பலமும் இந்த வெற்றிக்கு முதன்மையான காரணமாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் ஊழலை ஒரு முக்கிய பிரச்சினையாக காங்கிரஸ் முன்வைத்தது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியிலிருந்த கட்சி மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்கு நல்ல பலன் கிடைத்த நிலையில், மத்திய பிரதேசத்திலும் தீவிரமாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது காங்கிரஸ். கிடைக்கும் இடங்களில் எல்லாம் வியாபம் ஊழல் குறித்து பேசியது. ஆனால் அது தேர்தலில் பயன் தரவில்லை.

கர்நாடக மாநிலத்தில் ‘40% கமிஷன்’ என போஸ்டர் அடித்து ஒட்டியதைப் போலவே, மத்தியப் பிரதேசத்தின் சில இடங்களில் ‘50% கமிஷன்’ என போஸ்டர் அடித்து ஒட்டியது காங்கிரஸ். 19 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் 250 ஊழல்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.

மாநிலத்தில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினருக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்களை பேசுபொருளாக்கியது காங்கிரஸ். குறிப்பாக பழங்குடியினர் ஒருவர் அவமதிக்கப்பட்டது நாடு முழுவதும் பேசப்பட்ட நிலையில், இந்த விவகாரம் ஆளும் பா.ஜ.க-வுக்கு மிகுந்த சங்கடத்தைத் தரும் விவகாரமாக மாறியது.

ஆனாலும் காங்கிரஸின் முயற்சி பலிக்கவில்லை.

சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும், பெண்கள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூ.1,500 வழங்கப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ஆகிய வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டன. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை கர்நாடகாவில் நிறைவேற்றினோம்; அதை மத்தியப் பிரதேசத்திலும் நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் கட்சி பரப்புரையில் தெரிவித்தது. ஆனால் அது இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பிக்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்தது பா.ஜ.க. மேலும், தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் 11 பேருக்கு ஆசனம் கொடுத்தது. இது முன்னணி தலைவர்கள் பலருக்கும் உற்சாகமளிக்க தேர்தல் வேலைகள் பரபரத்ததும் பா.ஜ.கவின் வெற்றிக்கான காரணமாக கருதப்படுகிறது.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர சிங் தோமர் வீடியோ அழைப்பில் பேசுவது குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது. மூன்று முக்கிய பணிகளை முடிக்க, 139 கோடி ரூபாய்க்கு தேவேந்திர சிங் தோமர் பேரம் பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டது. மேலும், மற்றொரு முக்கிய பணியை முடிக்க 500 கோடி ரூபாய்க்கு தேவேந்திர சிங் தோமர் பேரம் பேசியதாக அதில் கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்தில் ஊழல் ஆட்சி நடப்பதாகவும், பா.ஜ.க ஆட்சியில் கமிஷன் தலைவிரித்து ஆடுவதாகவும் தேர்தல் பிரசாரங்களில் குற்றம் சாட்டியது. ஆனால், இது போலியான வீடியோ என்று பா.ஜ.க மறுத்தது. இந்த வீடியோவும் மத்திய பிரதேச அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “நாட்டு மக்கள் தங்கள் மனநிலையை இந்த தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்” என்றார்.

நேற்று ஒரே நாளில் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ள நிலையில், வட இந்தியாவில் காங்கிரஸ் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், ஒரே நாளில் இரு மாநிலங்களையும் காங்கிரஸ் இழந்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. அடுத்த வருடம் நடைபெறவிருக்கின்ற இந்திய பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றியீட்டுமென்ற நம்பிக்ைகயை இப்போதைய சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

வட இந்தியாவில் காங்கிரஸ் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. பா.ஜ.கவின் பலம் அங்கே அதிகரித்துக் கொண்டே இருப்பதையே இது காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே வட இந்தியாவில் பாஜக, தென் இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் என்ற நிலைமைதான் இருக்கிறது. இந்தியாவில் 5 மாநில தேர்தல் குறித்து இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளும் உற்றுநோக்குகின்றன. இதற்கு முக்கியமான காரணம் இந்திய பங்குச்சந்தையாகும்.

ஐந்து மாநில தேர்தலில் மிசோரம் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநில தேர்தல்களின் முடிவுகளில் BJP கட்சியின் வெற்றி பிரகாசமாக இருக்கும் காரணத்தால் இன்று திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் குறித்தும், 5 மாநில தேர்தல் 2024 தேர்தல் வெற்றி குறித்தும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் டிவிட்டரில் பணமழை பெய்யப் போவது போல் கொக்கரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT