அம்பேபுஸ்ஸ சிப்பாய் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது | தினகரன்

அம்பேபுஸ்ஸ சிப்பாய் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

அம்பேபுஸ்ஸ சிப்பாய் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது-Ambepussa Army Camp Soldier Murder-2 More Arrested

 

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,  பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், கேகாலை, புளத்கொஹுபிட்டியவைச் சேர்ந்த 21 வயதான ஜயசேன எனும் சிப்பாய் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தின்போது குறித்த சிப்பாயிடமிருந்து T56 வகை துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் அடங்கிய மெகசின்  என்பன ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பேலியகொடை  குற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, கடந்த செப்டெம்பர் 25 ஆம் திகதி, குறித்த இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 29 மற்றும் 27 வயதுடைய இரு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து களவாடப்பட்ட துப்பாக்கி மற்றும் மெகசின்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இராணுவ சிப்பாய், இராணுவ முகாமினுள் இருந்த, காவல்அரணில், அதிகாலை 2.00 - 4.00 மணி வரை, கடமையில் இருந்த வேளையில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபர்கள் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி அத்தனகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் விதிக்கப்பட்டது.

சந்தேகநபர்களில் ஒருவர், கடந்த ஓகஸ்ட் 02 ஆம் திகதி, குறித்த முகாமிலிருந்து மேலும் ஒரு T56 வகை ஆயுதத்தை களவாடி, அதனை அவரது நண்பரான இராணுவ சிப்பாய் ஒருவர் ஊடாக, இராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவருக்கு ரூபா 2 இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த களவு  சம்பவம் தொடர்பில்  அன்றைய தினமே மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதற்கமைய பேலியகொடை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட   விசாரணைகளை அடுத்து, குறித்த துப்பாக்கி மற்றும் அதற்கான மெகசின், இரண்டு  கையடக்கத் தொலைபேசிகளுடன், நேற்றைய தினம் (08) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோகந்தர மற்றும் பியகம் பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து  இன்றைய தினம் (09) அத்தனகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,  பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...