Saturday, April 20, 2024
Home » வெளிநாட்டில் விவாகரத்து இலங்கையிலும் செல்லுபடி

வெளிநாட்டில் விவாகரத்து இலங்கையிலும் செல்லுபடி

மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

by damith
December 4, 2023 6:40 am 0 comment

இலங்கையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருந்தால், இலங்கை சட்டத்தின் கீழ் அந்த விவாகரத்து செல்லுபடியாகுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் மீண்டும் இலங்கையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து பெற வேண்டும் என்ற நடைமுறையில் இருந்த சட்டத்தை மாற்றியமைத்து இவ்வாறு தீர்ப்பளித்தது.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தனது விவாகரத்தை ஏற்குமாறு திருமணப் பதிவாளர் நாயகத்துக்கு உத்தரவிடக் கோரி, ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழாம் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்தின் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட லியனகே சம்பிக்க ஹரேந்திர சில்வா என்ற நபரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவில் திருமணப் பதிவாளர் நாயகம் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மனுதாரர் பூர்ணா செவ்வந்தி நாகசிங்க என்பவரை 2010 ஆம் ஆண்டு இந்நாட்டில் திருமணம் செய்து கொண்டு, திருமணத்துக்குப் பிறகு இருவரும் இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்கச்சென்றனர். பின்னர் அங்கு திருமணம் முறிந்து, மனுதாரர் தனது வழக்கறிஞர் மூலம் கடுவெல மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பூர்ணா செவ்வந்தி நாகசிங்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மனுதாரரை விவாகரத்து செய்வது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிங்டன் குடும்பநல நீதிமன்றத்தில் ஏற்கனவே விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, கடுவெல மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை வாபஸ் பெற மனுதாரர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்னர் இது தொடர்பான விவாகரத்து இங்கிலாந்தில் உள்ள கிரிஸ்டல் குடும்ப நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது மற்றும் அது தொடர்பான விவாகரத்து சான்றிதழ் 2018 இல் பெறப்பட்டது.

பின்னர் மனுதாரர் 2019 இல் தாய்லாந்தின் பெங்கொக்கில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

2021 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள கிங்டன் குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை ஏற்குமாறு இந்த நாட்டின் பதிவாளர் நாயகத்தை மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் பதிவாளர் நாயகம் விவாகரத்தை மறுத்துள்ளதுடன், மனுதாரர் இந்த நாட்டிலுள்ள பொருத்தமான நீதிமன்றத்தில் விவாகரத்து பெற வேண்டுமென கூறியுள்ளார்.

பதிவாளர் நாயகத்தின் தீர்மானத்துக்கு எதிராக விவாகரத்து வழங்குமாறு கோரி மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணையின் முடிவில், இதுதொடர்பான முடிவை அறிவிக்கும் போது, வெளிநாட்டில் நடந்த விவாகரத்து, இந்த நாட்டிலும் செல்லுபடியாகும் விவாகரத்தாக ஏற்கப்படும் என நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டனர்.

விவாகரத்து சட்டத்தின் கீழ் உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ள போதிலும் அந்த நீதிமன்றம் இலங்கையில் அமைந்துள்ள நீதிமன்றம் மாத்திரம் அல்ல என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT