சவூதி துணைத் தூதரகத்தை சோதனையிட துருக்கி திட்டம் | தினகரன்

சவூதி துணைத் தூதரகத்தை சோதனையிட துருக்கி திட்டம்

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசொகி கடந்த வாரம் மாயமான இஸ்தான்பூலில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் சோதனையிடவிருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. அவர் காணாமல் போனது குறித்து சவூதி ‘அவசர பதில்களை’ கூற வேண்டும் என்று அதன் நெருங்கிய நட்பு நாடான பிரிட்டனும் வலியுறுத்தியுள்ளது.

தனது எதிர்வரும் திருமணம் குறித்து ஆவணங்களை பெற கடந்த வாரம் துணைத் தூதரகத்திற்குள் நுழையும்போதே ஜமாலை கடைசியாக காணக்கிடைத்துள்ளது. தூதரகத்திற்கு வெளியே காத்திருந்த அவரது எதிர்கால மனைவி அவர் தூதரகத்தில் இருந்து வெளியே வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை தொடுக்கும் ஜமால் தூதரகத்திற்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று துருக்கி அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஜமால் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கு ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் கடந்த திங்கட்கிழமை சவூதியிடம் கேட்டார்.

ஜமால் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜமாலை தாம் கொன்றது அல்லது கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சவூதி அடிப்படை அற்றது என நிராகரித்து வருவதோடு துணைத் தூதரகத்திற்குள் சோதனையிட சவூதி நிர்வாகம் துருக்கிக்கு அனுமதி அளித்திருப்பதாக துருக்கி அரச செய்தி நிறுவனமான அனடொலு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜமால் கசொகி விவகாரத்தில் புலனாய்வுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சவூதி கூறியுள்ள நிலையில், துருக்கி வெளியுறவு அமைச்சகம், புலனாய்வின் ஒரு பகுதியாக தூதரக கட்டடத்திற்குள் தேடுதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சவூதியின் வெளியுறவு அமைச்சர் அல் ஜூபைரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் ஜெரீமி ஹன்ட், “நட்பு என்பது ஒருவரையொருவர் மதித்து நடப்பதை பொருத்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை பொருத்தவரையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மை எனில் இந்நிகழ்வினை பிரிட்டன் மிகவும் தீவிரமான ஒன்றாக கருதி அதற்கேற்ப அணுகும் என பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே ஊடகவியலாளர் ஜமால் மயமானது தொடர்பில் சவூதியின் 15 பேர் கொண்ட உளவுக் குழு அடையாளம் காணப்பட்டிருப்பதாக துருக்கியின் அரச ஆதரவு சபாஹ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜமால் காணாமல்போன ஒக்டோபர் 2 ஆம் திகதி அதே துணைத் தூதரகத்திற்கு 15 பேர் கொண்ட சவூதி குழுவொன்று வந்திருந்ததாக துருக்கி பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.


Add new comment

Or log in with...