ஆசிய பரா விளையாட்டில் 3ஆம் நாளில் இலங்கைக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் | தினகரன்

ஆசிய பரா விளையாட்டில் 3ஆம் நாளில் இலங்கைக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம்

100 மீற்றரில் இலங்கை வீரர்கள் ஹெட்ரிக் சாதனை

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் ஆசிய பரா விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று (10) நடைபெற்ற ஆண்களுக்கான டீ. 64/44 பிரிவு உயரம் பாய்தலில் பங்குகொண்ட லால் புஷ்பகுமார வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.

இதன்படி, ஜகார்த்தாவில் நடைபெற்றுவருகின்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று மாலை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இலங்கை அணி, 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 9 பதக்கங்களை வென்றது.

குறித்த போட்டியில், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த கியாசொவ் டெமுர்பெக் (1.95 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், ஜப்பானைச் சேர்ந்த சுசுக்கி தொரு (1.89 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்.

இதேநேரம், போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (09) நடைபெற்ற ஆண்களுக்கான டீ. 43/63 பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர். இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட 2ஆவது ஹெட்ரிக் பதக்கம் இதுவாகும்.

முழங்காலுக்கு கீழ் கால்களை இழந்த அல்லது கால் செயலிழந்த வீரர்கள் மாத்திரம் பங்குகொண்ட இப்போட்டியில் இடம்பெற்ற அநீதி சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து இலங்கைக்கு இந்த மூன்று பதக்கங்களையும் வழங்க ஆசிய பரா ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இப்போட்டியில் திருத்தப்பட்ட முடிவுகளின் பிரகாரம் இலங்கையின் அமில பிரசன்னவுக்கு (12.56 செக்.) தங்கப் பதக்கமும், உப்புல் இந்திக்க சூலதாசவுக்கு (12.87 செக்.) வெள்ளிப் பதக்கமும், சுரங்க கீர்த்தி பண்டாரவுக்கு (12.97 செக்.) வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன.

எனினும், போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமில பிரசன்ன தங்கப் பதக்கத்தையும், இந்திக்க சூலதாச வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றிருந்தனர். எனவே இம்முறை போட்டிகளில் இலங்கைக்காக 2 பதக்கங்களை வென்று கொடுத்த வீரர்களாகவும் அவர்கள் இடம்பிடித்தனர்.

ஒரு கையை இழந்த அல்லது முழங்கைக்கு மேல் செயழிலந்த ஆண்களுக்கான டீ. 45/46/47 பிரிவில் போட்டியிட்ட இலங்கையைச் சேர்ந்த பிரதீப் சேமாசிரி (23.12 செக்.), ஐந்தாவது இடத்தையும், சமன் மதுரங்க (23.17 செக்.) ஆறாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில், சீனா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இது இவ்வாறிருக்க, இதே போட்டிப் பிரிவில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அமரா இந்துமதிக்கு (27.96 செக்.) ஐந்தாம் இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

குறித்த போட்டியில் சீன நாட்டு வீராங்கனைகளான லூ லி மற்றும் யன்பிங் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும், இந்தியாவின் ஜயன்தி பிஹேரா வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

இதேவேளை, ஆண்களுக்கான டீ. 44/62/64 பிரிவு 200 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட மற்றுமொரு இலங்கை வீரரான அஜித் பிரசன்ன குமார் (24.99 செக்.) ஆறாவது இடத்தைப் பெற்றார்.

அத்துடன், ஆண்களுக்கான டீ. 43/44/62 பிரிவு தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட சம்பத் சமிந்த ஹெட்டியாரச்சி, 33.10 மீற்றர் தூரத்தை எறிந்து எட்டாவது இடத்துடன் ஆறுதல் அடைந்தார்.

எனினும், போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தினை சம்பத் சமிந்த வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்காக, இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் பங்கேற்றுள்ள 44 நாடுகளில் 31 நாடுகள் இதுவரை பதக்கங்களை வென்றுள்ளதுடன்,நேற்று மாலை வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் சீனா 88 தங்கம், 38 வெள்ளி, 33 வெண்கலத்துடன் மொத்தம் 159 பதக்கங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில் மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகின்ற இலங்கை அணி 9 பதக்கங்களுடன் 15ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...