44ஆவது தேசிய விளையாட்டு விழா ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம் | தினகரன்

44ஆவது தேசிய விளையாட்டு விழா ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 44ஆவது தேசிய விளையாட்டு பெருவிழா இன்று (11) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை பொலன்னறுவை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2ஆவது தடவையாக வட மத்திய மாகாணத்தில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு பெருவிழா, முன்னதாக 2012ஆம் ஆண்டு பொலன்னறுவையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நாளை பிற்பகல் 2.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 44ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் வண்ணமயமான தொடக்க நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளன.

மாகாணசபைகள் ,உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இராஜங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்கிரம மற்றும் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஒன்பது மாகாண ஆளுநர்கள் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்

தேசிய விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் தீபத்தை 2013 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 4x400 அஞ்சலோட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற கே. கசுன் கல்ஹார செனவிரத்தன மற்றும் 2001ஆம் ஆண்டு 5 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்த அணியின் வீராங்கனை ஏ.ஜி.எல் பிரியங்கிக்கா ஆகியோர் ஏற்றவுள்ளனர்.

ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 1543 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அத்துடன் 443 அதிகாரிகள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி 3.30 மணிக்கு இடம்பெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 12ஆம் திகதி காலை 6 .15 மணிக்கு ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் இறுதிப் போட்டியும் 7.10 மணிக்கு பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் இறுதிப் போட்டியும் பெண்களுக்கான கோலுன்றிப் பாய்தல் போட்டியும் முக்கிய போட்டியாக இடம்பெறவுள்ளது.

200 மீற்றர் ஆண்கள், பெண்கள் தகுதிகாண் போட்டியும் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளில் தகுதிச்சுற்று, அரையிறுதி மற்றும் இறுதி என 60 போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், வருடத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதுகள் மற்றும் சம்பியன் அணிக்கான விருதினை இறுதிநாள் நிகழ்வுகளின் போது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலன்னறுவையில் இருந்து பரீத் ஏ. றகுமான்


Add new comment

Or log in with...