வரண்டு கிடக்கும் பூமியில் நீரை உறிஞ்சுவது நியாயமா? | தினகரன்

வரண்டு கிடக்கும் பூமியில் நீரை உறிஞ்சுவது நியாயமா?

தொழிற்சாலைகள் தோன்றுமிடத்து தொழில்வாய்ப்புகள் உருவாகும். அதனால் தொழிலின்றி இருந்தோர் தொழிலையும், அதனுாடாக வருமானத்தையும் பெறுவார்கள். ஒரு பிரதேசத்தில் வருமானமொன்று உருவாக்கப்படும் போது அங்கே சமூக,கலாசார,பொருளாதார மாற்றங்கள் தோன்றுவது இயற்கை.

அத்தொழிற்சாலை மறைமுகமான தொழில் வாய்ப்புகளை பலருக்கு வழங்கலாம். உதாரணத்திற்கு அத்தொழிற்சாலைக்கருகே உணவுச்சாலைகள், சிற்றுண்டிக் கடைகள் தோன்றலாம் இவை மறைமுக தொழில்வாய்ப்பு எனப்படும். ஆகையால் ஒரு தொழிற்சாலை தோன்றுவதை பலரும் வரவேற்பதுண்டு.

இப்போது மட்டக்களப்பின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புல்லுமலை கிராமத்தில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் தண்ணீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலையும் பல சங்கடங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்த வண்ணம் இருக்கின்றது. அத்தொழிற்சாலை இவைகளைத் தாண்டி நிலைபேறடையுமா அல்லது காற்றோடு காற்றாய் பறந்து விடுமா என்பது கால ஒட்டத்தைப் பொறுத்தே தெரியும்.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் மேற்கு எல்லையில் உள்ள கிராமம் புல்லுமலை . அங்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும், சிங்கள மக்கள் சொற்ப தொகையினராகவும் வாழ்கின்றனர். இங்கு வாழும் குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்ங்களாகவே இருக்கின்றன.

செங்கலடியிலிருந்து மகாஒயா பாதை வழியாக கண்டி, பதுளை, நுவரெலியா ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் யாவுமே புல்லுமலையை ஊடறுத்துச் செல்ல வேண்டியிருக்கும். உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் இங்கே பிரபலமான உணவு விடுதி இருந்ததை அப்போதைய காலத்தின் இளவயதுக்காரர்கள் இப்போது மறக்காமல் இருப்பார்கள். இங்கே வாழ்கின்ற மக்கள் சேனைப்பயிர்ச் செய்கையிலும், தேன் சேகரித்தல், மந்தைவளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

21ம் நுாற்றாண்டுக்கேற்ற நாகரிகத்தை அவர்கள் இன்னும் எட்டவில்லை என்று கூறலாம். இங்கு ஒரு கத்தோலிக்க ஆலயம் இருக்கிறது. அப்பகுதிக்கும் ஆலயத்திற்கும் பொறுப்பான பங்குத் தந்தையும் அங்கு இருக்கிறார்.இக்கிராமத்தில் இந்துக்கோயில்கள் இருக்கின்றன. இவ்விரு கோயில்களின் மதகுருமார் மக்களோடு சுமுக உறவைப் பேணி வருவதை காணக் கூடியதாக உள்ளது.

இத்தொழிற்சாலை தனியார் கம்பனிக்குச் சொந்தமானது. அக்கம்பனியின் பங்குதாரர்கள் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். இக்கம்பனியின் நோக்கம் நிலக்கீழ் நீரைப் பெற்று அந்நீரை போத்தலில் அடைத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனைக்கு விடுவதாகும். அக்கம்பனியின் செயற்திட்ட அறிக்கையில், அவ்வாறு பெறப்படும் நீர் நாளொன்றுக்கு 10000 லீற்றருக்கு மேற்படாது எனக் கூறுகிறது.

அதேநேரத்தில் தொழில்நுட்ப அறிக்கை நாளொன்றுக்கு 39000 லீற்றர் நிலக்கீழ்நீரைப் பெற முடியும் எனக் கூறுகிறது. மத்திய சூழல் அதிகாரசபை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேநேரத்தில் மத்திய சூழல் அதிகாரசபை இத்திட்டத்திற்கு இன்னொரு கட்டுப்பாட்டையும் விதித்திருக்கிறது. அதாவது தொழிற்சாலையின் ஆரம்பத்திலிருந்து நாளொன்றுக்கு எவ்வளவு நிலக்கீழ் நீர் பெறப்படுகிற்து என்பதைக் கண்டறிய ஒரு அளவீட்டுமானியை அச்சபை பொருத்தும் என திட்ட அறிக்கையில் பிற்சேர்க்கை செய்யப்பட்டுள்ளது. ஆதலால் இத்தொழிற்சாலை தான் வேண்டிக் கொண்ட நீருக்கு மேலதிகமான நீரை பெற முடியாததாக இருக்கும்.

இத்திட்டத்தை நிறுத்த வேண்டுமென இப்பகுதியின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் உணர்வாளர்கள், மதகுருமார், சமூக முன்னோடிகள், பொதுமக்கள் என பல தரப்பினர்கள் ஒன்றிணைந்து இதற்கெதிரான ஆர்ப்பாட்ங்களையும், கடையடைப்புக்களையும் ஹர்த்தாலையும் செயற்படுத்தியிருந்தனர். அது மட்டக்களப்பின் இயல்பு நிலையை ஸதம்பிக்கச் செய்தது. மக்கள் இதற்கு பூரண ஆதரவை வழங்கியதைக் காணக் கூடியதாய் இருந்தது. இதற்கு மக்களை ஒன்றிணையுமாறு பலர் அறிக்கைகளையும் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகத்திருந்தனர். அதில் பிரதானமாக தமிழத் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றது. அத்தோடு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவண. கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோரும் உள்ளடங்குவர்.

அதன் பிற்பாடு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

இது பற்றி கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன் "புல்லுமலைப் பிரதேசம் ஒரு உயர்ந்த மேட்டு நிலப்பிரதேசம். அங்கு மழைகாலத்தில் நீர் நிலத்தடிக்கு இறங்குவதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு தொழிற்சாலை நிலத்தடி நீரை நாளாந்தம் உறிஞ்சுகின்ற போது அப்பிரதேசம் தரிசு நிலமாக மாறிவிடும் சாத்தியம் நிறைய இருக்கின்றது. எதியோப்பியா இதற்கு நல்ல உதாரணம். வழக்கமாக புல்லமலை பிரதேசம் ஒரு வரண்ட பிரதேசம். இப்பகுதி மக்கள் பல காரணங்களினால் இத்தொழிற்சாலை அங்கு அமைவதை வெறுக்கிறார்கள். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். எங்களை அந்த மக்களே தெரிவு செய்தார்கள். ஆதலால் எங்களைத் தெரிவு செய்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் நடக்க மாட்டோம்" என்றார்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவண. கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை "புல்லுமலை இன்று நேற்று உருவான கிராமமல்ல. அது பூர்விக வரலாற்றைக் கொண்ட தமிழ்க் கிராமம். அது ஒரு வரட்சியடைந்த பிரதேசம். மழையை நம்பி சேனைப்பயிர் செய்கின்ற கிராமம். இந் இலட்சணத்தில் அங்குள்ள நிலத்தடி நீரை நாளொன்றுக்கு 10000 லீற்றர் வீதம் உறிஞ்சும் போது புல்லுமலை உருமாறி புழுதி மலையாகி விடலாம். இத் தொழிற்சாலை அங்குள்ள இயற்கை வளத்தை அழித்து அப்பூமியை நாசமாக்கி விடும். இயற்கை வளம் ஒன்றோ பலவோ அழிக்கப்பட்டால் அவை மீள் உருவாக்கம் பெறக் கூடுமானதாய் இருப்பது அவசியம். அவ்வாறான செயற்பாடு இத்திட்டத்தில் இருக்கிறதா? இல்லை.

என்னதான் தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பித்திருந்தாலும் இதனை அப்பகுதி மக்கள் நம்புவதாக இல்லை. அதனால்தான் இத்தொழிற்சாலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நான் ஆதரவழித்து பத்திரிகைகளிலும் அறிக்கை விட்டிருந்தேன்" என்றார்.

இதுபற்றி இப்பகுதியின் கிராமவாசி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மாவட்டத்தில் மூவர் இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் மாதாமாதம் ஜனாதிபதியின் தலைமையில் நடக்கும் வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்திச் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள், கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அந்தச் செயலணியில் இத்திட்டத்தினையும் அதன் செயற்பாட்டினையும், அது எற்படுத்தப் போகும் பாரிய தாக்கத்தையும் முன்வைத்திருக்கலாம் அல்லவா? அப்படிச் செய்தால் இந்தத் தொழிற்சாலையை இடைநிறுத்தி விடலாமே! ஏன் இதுவரை கூட்டமைப்பினர் செய்யவில்லை? இது புரியாத புதிராக இருக்கிறது" என்றார்.

எஸ். தவபாலன்
(-புளியந்தீவு தினகரன் நிருபர்-)


Add new comment

Or log in with...