Thursday, March 28, 2024
Home » COP 28 மாநாட்டில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழக திட்டம்

COP 28 மாநாட்டில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

இலங்கையில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்தாபிக்கப்படுவதுடன் இது சர்வதேச பல்கலைக்கழகமாக செயற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு

by damith
December 4, 2023 6:50 am 0 comment

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் (ICCU) திட்டத்தை நேற்று (03) டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

உலக நாடுகள் பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்கிய போதிலும், அந்த நாடுகள் ஒப்புக்கொண்ட இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நிறுவன மாற்றங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லையென்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்த அவசரத் தேவையை உணர்ந்து, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான தீர்மானமிக்க முயற்சிகளுக்குப் பங்களிப்பதற்குத் தேவையான திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்காக காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை (ICCU) நிறுவுவதற்கு பரிந்துரைத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், இப்பல்கலைக்கழகம் இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அது சர்வதேச பல்கலைக்கழகமாக செயற்படும் எனவும், அதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளினதும் ஆதரவையும் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பங்களாதேஷ், சீஷெல்ஸ் மற்றும் மோல்டோவா போன்ற நாடுகள் ஏற்கனவே இந்தப் பணிக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் ஒரு தேசத்தின் பொறுப்பல்ல எனவும் முழு உலகமும் அதனுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT