வடக்கு, கிழக்கில் இனவாதத்தை தூண்ட இடமளிக்க முடியாது | தினகரன்

வடக்கு, கிழக்கில் இனவாதத்தை தூண்ட இடமளிக்க முடியாது

தொல்பொருள் பிரதேசங்களை காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல

தொல்பொருள் பிரதேசங்களைக் காரணம் காட்டி வடக்கு, கிழக்கில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொல்பொருள் திருட்டு, அழிப்பு மற்றும் அகழ்வு போன்ற குற்றச் செயல்கள் தெற்கிலேயே பெருமளவு இடம்பெற்றுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதனோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான குற்றச் செயல்களே வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுள்ளதாகவும் சபையில் தெரிவித்தார்.

கடந்த இரண்டரை வருடங்களில் தொல்பொருள் தொடர்பான 677 குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அநுராதபுரம், குருநாகல் போன்ற மாவட்டங்களிலேயே பெருமளவிலான குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று தமது அமைச்சின் விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில் அதனைச் சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கில் நெருக்கடிகளை உருவாக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

அத்தகையோரே வடக்கு, கிழக்கில் தொல்பொருள் பிரதேச விடயங்களைக் கிளரிவிட்டு இனங்களுக்கிடையில் நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு இடமளிக்க முடியாது.

தொல்பொருள் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற 677 குற்றச்செயல்களில் 36 திருட்டுக்களும் 75 அழிப்புக்களும், 515 அகழ்வுகளும் இடம்பெற்றுள்ளதுடன் உரிய சட்டத்தை மீறும் வகையில் 51 குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 178 குற்றச் செயல்கள அநுராதபுரத்திலும் 75 குற்றச் செயல்கள் குருநாகலிலும் இரத்தினபுரியில் 23, அம்பாந்தோட்டையில் 28, கம்பஹா 23, மாத்தளை 28 என வடக்கு, கிழக்குக்கு வெளியிலேயே பெருமளவு குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, வடக்கில் யாழ்ப்பாணத்தில் ஒரு குற்றச் செயலும் மன்னாரில் 3, கிளிநொச்சியில் 3, மட்டக்களப்பில் 6 என மிகக் குறைந்த குற்றச் செயல்களே இடம்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...