வடக்கு அபிவிருத்திக்கு அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு இல்லை | தினகரன்

வடக்கு அபிவிருத்திக்கு அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு இல்லை

வட மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என்பதுடன், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லையென அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார்.

தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் ஆர்.தென்னக்கோன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்றது

இதன்போது, வட்டுக்கோட்டை பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியமை தொடர்பாக எழுந்த பிரச்சினையின் போதே அமைச்சர் மனோ இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமாக 850 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தமது அமைச்சினூடக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், இதற்கான திட்ட முன்மொழிவுகளை விரைவுபடுத்தி தமது அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு ஐந்து மாவட்டங்களின் அரச அதிபர்களையும் கேட்டுக்கொண்டார்.

தமது பணிகளை விரைந்து முன்னெடுக்க வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் இங்கு குறிப்பிட்டதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க தாம் முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்குவதில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ரவீந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஐந்து மாவட்டங்களின் அரச அதிபர்கள், உள்ளூராட்சி தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

 

 


Add new comment

Or log in with...