ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும் | தினகரன்

ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் உண்மை மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிவது மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்பவற்றை ஒதுக்கிவைத்துவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இழப்பீடுகள் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இழப்பீடுகள் பற்றிய அலுவலகத்தினால் தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு சுயாதீனமானதாக இருக்க வேண்டும். இழப்பீடுகளை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் இருப்பதைவிட சுயாதீனமான கட்டமைப்பொன்றிடம் இருப்பதே வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என்றார்.

காணாமல்போனோர் அலுவலகம் பற்றிய சட்டம் பாரிய நீண்டகால இழுபறியின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. எனினும், இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. காணாமல்போனோர் அலுவலகத்துக்கு திறமையானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் சரியான முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

இழப்பீட்டு அலுவலக சட்டமூலம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் உண்மை மற்றும் நீதியை ஒதுக்கிவைத்துவிட்டு இதனை நிறைவேற்ற முடியாது. உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்பதன் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

இழப்பீட்டு அலுவலகத்தினால் கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயாதீனமான முறையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்குவதாயின் அவர்களின் திறன்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொது மக்கள் பொருளாதார ரீதியில் பலப்படுத்தப்பட வேண்டும்.

காணி, அடிப்படையான விடயமாகவுள்ளது. பொது மக்களின் பல காணிகள் இன்னமும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னும் காணிகள் பல விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. வடக்கு, கிழக்கில் காணிக் கச்சேரிகள் இல்லை. எனவே இழப்பீடு பற்றிய கொள்கைத் திட்டத்தைத் தயாரிக்கும்போது சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

நீண்டகாலமாக இளைஞர்கள் பலர் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன, சிலருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை, சிலருக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. தம்மை விடுவிக்கக் கோரி சிறைச்சாலைகளிலிருந்து அவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். இவர்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புதல் வாக்குமூலத்தின் ஊடாகவே இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்துள்ளது. இதில் ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.

இவ்வாறான நிலையில் இழப்பீட்டு அலுவலகம் தயாரிக்கும் கொள்கைத் திட்டங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களுக்கு உண்மையான, நியாயமான தீர்வை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...