அரசாங்கத்தை கவிழ்க்கும் கோட்டாபயவின் வியூகம் கண்டறியப்பட வேண்டும் | தினகரன்

அரசாங்கத்தை கவிழ்க்கும் கோட்டாபயவின் வியூகம் கண்டறியப்பட வேண்டும்

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ வகுத்துள்ள வியூகம் உரிய விசாரணைகள் மூலம் கண்டறியப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நேற்று கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இராணுவப் புரட்சியை அல்லது மக்கள் புரட்சியை முன்னெடுக்கப் போகின்றாரா? என தெரியாமல் நாட்டு மக்கள் குழம்பி போயிருக்கும் நிலையில் உரிய விசாரணை மூலம் மக்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஏதேனும் முறையில் அரசாங்கத்தை கவிழ்ப்போமென கோட்டாபய அதிரடியாக வெளியிட்டிருக்கும் கூற்று அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் விளக்கமளித்தார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசியலமைப்புக்கு முரணான கருத்தை வெளியிட்டமைக்காக விஜயகலா எம்.பி து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன போன்று கோட்டாபய ராஜபக்ஷ மீதும் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாவென ஊடகவியலாளர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ, "எம்முறையிலாவது அரசாங்கத்தை கவிழ்ப்போம். ஆனால் அம்முறை எதுவென தெரியாது," என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

'அம்முறை' எதுவென்பது தான் இப்போது மக்களையும் இராணுவத்தினரையும் குழப்பமடையச் செய்துள்ளது. அரசாங்கத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அதற்கும் அப்பால் அவர்கள் புதிய வியூகமொன்றை வகுத்திருப்பார்களாயின் அது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முறை மற்றும் வியூகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் அதுபற்றி தனக்கு தெரியாது என கூறியிருப்பது தான் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென்றும் ரஹ்மான் எம்.பி கூறினார். மேலும் கோட்டாபய, பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் அவர் அரசியலமைப்பையும் மீறி இராணுவப் புரட்சி அல்லது மக்கள் புரட்சியை நோக்கி செல்வாரோ என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு விடயங்களில் முக்கிய பொறுப்பில் இருந்த அவருக்கு அரசியலமைப்பு பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை மாற்றுதல் ஆகியன மூலமே அரசாங்கத்தை மாற்ற முடியும்.

அதற்கும் அப்பால் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அவரிடம் புதிய வியூகம் இருக்குமானால் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய முறையில் விசாரணை செய்து கண்டறிய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்ெகாண்டார்.

லக்ஷ்மி பரசுராமன்

 


Add new comment

Or log in with...