கோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை | தினகரன்

கோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை

கோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை-Gotabaya and 6 Others Released on Bail
கோத்தாபய ராஜபக்‌ஷவிடம் கைவிரல் அடையாளம் பெறப்பட்ட போது...

 

பிணையில் செல்ல விசேட நீதிமன்றம் அனுமதி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தங்காலை, வீரகெட்டிய, மெதமுலான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாண பணிகளின்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில், இன்று (10) விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றது.

சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு விசாரணை, சம்பத் அபேகோன் சம்பத் விஜயரட்ண, சம்பா ஜானகி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்தே அவர்கள் 07 பேருக்கும் பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்து.

அதற்கமைய தலா ரூபா 100,000 கொண்ட ரொக்கப் பிணை மற்றும் ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவர்கள் 07 பேரையும் விடுவிக்குமாறு சிறப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அவர்களது கைவிரல் அடையாளங்களை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சந்தேகநபர்கள் 07 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்த விசேட மேல் நீதிமன்றம், அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

குறித்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில், இவ்வழக்கை விசாரிப்பதற்கு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் தொடர்பில், அடிப்படை எதிர்ப்பை முன்வைப்பதாக, கோத்தாபய ராஜபக்‌ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் சார்பில் விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையை அடுத்து, இது தொடர்பில் ஆட்சேபணை ஏதும் உள்ளதா என, நீதிபதிகள் குழாமினால் வினவப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட 07 பேரும், பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தவர்கள் என்பதால், அவர்களுக்கு பிணை வழங்குவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான, பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்தார்.

தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில், ரூபா 33 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், 07 குற்றப்பத்திரிகைகளின் கீழ், கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி, சட்ட மாஅதிபரினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, வழக்கின் பிரதிவாதிகளுக்கு இன்றைய தினம் (10) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த ஓகஸ்ட் 27 ஆம் திகதி, விசேட மேல் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணைகளின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அங்கு பிரசன்னமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த 07 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்கமைய, இந்த விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...