உலக அஞ்சல் தினம் இன்று | தினகரன்

உலக அஞ்சல் தினம் இன்று

 

தொடர்பாடல்துறையில் இன்றும் மக்களுக்கு உதவும் அஞ்சல் சேவை

ஒக்டோபர் ஒன்பதாம் திகதியான இன்று உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகின்றது.

அக்காலத்தில் உலகில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது மனதில் தோன்றிய எண்ணக்கருவினை இன்னொரு நாட்டில் உள்ளவரோடு பரிமாறிக் கொள்வதற்கு இந்த அஞ்சல் சேவையே உதவியது.

இன்றைய நவீன தொடர்பு சாதனங்கள் ஊடாக தகவல்கள் நொடிப் பொழுதினில் பரிமாறப்பட்டாலும் நீதிமன்றம் மற்றும் அரச நிர்வாக செயற்பாடுகள் என்பவற்றிற்கு அஞ்சல் சேவையே அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. தொலைதூரத்தில் உள்ள நாடுகளுக்கு அசல் கோவைகள் வான் கடிதம் வாயிலாக உரிய நிலையத்திற்கு சென்றடைய அஞ்சல் சேவை உறுதுணை புரிகின்றது. மிகக் குறைந்த கட்டணத்தில் தொடர்புகளை ஏற்படுத்த வழிசமைப்பது தபால் சேவையாகும்.

உலகில் முதன் முதலில் அஞ்சல் தலையை வெளியிட்ட பெருமை பிரித்தானியாவைச் சாரும்.

ஆரம்பத்தில் இத்தபால் தலையைச் செல்லுபடியற்றதாக்குவதற்கு கறுப்பு மையையே உபயோகிக்கத் தீர்மானித்தனர். காலப்போக்கில் இப்பணிக்கு சிவப்பு நிறமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இலங்கை அஞ்சல் சேவையை இலாபகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு தீவிரமாக செயலாற்றி வருகின்றது.

எச்.எம்.எஸ்.கொட்டகதெனிய தபால் மாஅதிபராக பணியாற்றிய வேளை அறிமுகப்படுத்தப்பட்ட தபால் நிலையங்களுக்கான குறியீட்டு இலக்கங்களின் பயன் பூரண வெற்றியளிக்கவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. அஞ்சல் குறியீட்டு இலக்கத்தின் மகத்துவம் பற்றி அநேகமான வாடிக்கையாளர் அறிந்திருக்கவில்லை என்பதே இதற்கான பிரதான காரணியாகும். இதனால் கடிதங்களைத் தரம் பிரிப்பதில் ஏற்படுகின்ற சிக்கல் சொல்லும் தரமன்று.

இதற்கு நம் நட்டில் ஒரே பெயருடைய பல கிராமங்கள் உள்ளதும் காரணம். உதாரணத்திற்கு கொக்குவில், நாவலடி, களுதாவளை, புதுக்குடியிருப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். நாம் அஞ்சல் உறையில் முகவரியை எழுதும் போது கடிதம் போய்ச் சேர வேண்டிய தபால் நிலையத்தின் குறியீட்டு இலக்கத்தை தவறாமல் காட்சிப்படுத்தினால் தபால் பிரிப்பதில் தாமதம் ஏற்படாது.

அருணா தருமலிங்கம்
வந்தாறுமூலை


Add new comment

Or log in with...