நவராத்திரி இன்று ஆரம்பம் | தினகரன்

நவராத்திரி இன்று ஆரம்பம்

அம்பிகையின் அருள் வேண்டி இந்துக்கள் அனுஷ்டிக்கும் வழிபாடு

ந்துக்களின் விரதங்களுள் மிக முக்கியத்துவம் பெற்றது நவராத்திரி விரதமே. இதன் பெருமையும் மகிமையும் பல்வேறு இந்து சமய சாஸ்திரங்களிலும் புராண இதிகாசங்களிலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இவ்விளக்கங்கள் அனைத்தும் சக்தி வழிபாட்டின் தொன்மையையும் மகிமையையும் விளக்கி நிற்கின்றன. அறியாமையின் உருவமாகிய அசுரனை தேவி ஒன்பது நாள் விரதமிருந்து கொன்ற புனிதமான அந்த ஒன்பது இரவுகளையும்தான் நவராத்திரி என இந்துக்கள் போற்றுகின்றனர்.

ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் வளர்பக்கப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி_சக்திக்கு ஒன்பது ராத்திரி, அதுவே நவராத்திரி.

எங்கெங்கு காணினும் சக்தியடா... ஏழு கடல் அவள் வண்ணமடா என்றும், மாதா பராசக்தி இந்த வையமெலாம் நீ நிறைந்தாய், ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே என்றும் பாட்டுக்கொருபுலவன் பாரதி ஜெகன் மாதாவாகிய சக்தியைப் பாடிப் பரவியுள்ளார்.

நவராத்திரி விழா நடைபெறும் ஒன்பது நாட்களையும் மூன்றாக வகுத்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் சக்தியைத் தலைவியாகக் கொண்டு வழிபட்டனர். முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டுவோர் துர்க்கையை வழிபட்டு வீரத்தைப் பெறுவர்.

துர்க்கை வழிபாடு மிகப் ப​ைழமையானது. முற்காலத்தில் போருக்குச் செல்லு முன் போர் வீரர்களும் அரசர்களும் கொற்றவை எனப்படும் துர்க்கையை வழிபட்டுச் சென்று வெற்றிவாகை சூடி மகிழ்ந்தனர். பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தை மேற்கொள்வதற்கு முன் கொற்றவையை வழிபட்டு வன்னி மரப் பொந்தில் தமது ஆயுதங்களையும், போர்க்கருவிகளையும் மறைத்து வைத்தனர் எனவும், பினைர் அர்ச்சுனன் அந்த ஆயுதங்களைக் கொண்டே கௌரவர்களுடன் போர் புரிந்து வெற்றிவாகை சூடினான் எனவும் கூறப்படுகிறது. வீரத்தால் செல்வமும் புகழும் தேடி அச்செல்வத்தால் கலைகளை வளர்த்துக் களிப்புற்றிருந்தனர் நம்முன்னோர்.

இந்துக்களின் முன்னோர் மங்களகரமான செந்தாமரை மலரிலுறைகின்ற இலக்குமியை செல்வத்தின் தெய்வமாகக் கொண்டு வழிபட்டனர். அடுத்த மூன்று நாட்களும் இலக்குமியை வழிபட்டனர்.

இறுதி மூன்று நாட்களும் கல்வித் தெய்வமான சரஸ்வதியின் வழிபாட்டுக்குரிய நாட்களாகும். சரஸ்வதி பூசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விமரிசையாகக் கொண்டாடுவர். சரஸ்வதியை வழிபட்டு அவளின் அருட் சக்தி கொண்டு ஞானம் பெறுவர். வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்பணி பூண்டு வெள்ளைக் கமலத்தே அவள் வீற்றிருப்பாள். நம் உள்ளக் கோயிலிலும் உறைந்து நிற்பாள்.அவள் நாவுக்கரசி, நாமகள். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் தாயான சரஸ்வதியின் அருள் வேண்டி குலமகளிர் தம் வீடுகளை மெழுகி அழகுக் கோலமிட்டு அலங்காரக் கொலுவைத்து அறிவுத் தெய்வமாகிய அன்னை அபிராமியை பூசிப்பர்.

சரஸ்வதி பூசை நடக்கும் நவமியை மகாநவமி என்பர். இந்நவமியின் போதுதான் சரஸ்வதி தவமிருந்து பிரமாவைத் தன் பர்த்தாவாக அடைந்தாள் எனப் புராணங்கள் கூறுகின்றன. மகா நவமிக்கு அடுத்த நாள் விஜய தசமி. விஜய என்றால் ஜெயத்தை, வெற்றியை அளிக்கும் எனப் பொருள்படும். விஜயதசமி தேவி மகிடாசுரனைச் சங்கரித்த திருநாள். இத்தினத்தில் தான் பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடிந்து ஆயுதபாணிகளாகத் துக்காதேவியின் அருளால் கௌரவர்களின் கொடுமையை ஒழித்து விடுவதெனச் சங்கற்பம் செய்தனர்.இராமன் இராவணன் மீது படையெடுத்த தினமும் இதுவே.

சரஸ்வதி பூசையுடன் இணைந்து ஆயுதபூசை நடைபெறும். பண்டைய இந்து அரசர்கள் இந்த நவராத்திரி நன்னாளில் தமது போர்க் கருவிகளையும் ஆயுதங்களையும் பூஜையில் வைத்து வழிபடுவர். இன்றும் தத்தமது தொழிலுக்குரிய உபகரணங்களை வைத்துப் பூஜை செய்து வணங்கும் வழக்கம் உண்டு. வித்தியாரம்பம், வியாபார ஆரம்பம், தொழிற்பயிற்சி ஆரம்பம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த நன்னாள் இதுவாகும். இந்துப் பெருமக்கள் இப்புனித நன்னாளில் தமது புது முயற்சிகளைத் தொடங்கிப் பயனடைவர்.

நாடெல்லாம் போற்றும் இந்த நவராத்திரி நாளினிலே அன்னையின் அருள்பெற இந்துக்கள் வழிபாடு செய்வர்.

 

திருமதி
ராஜினி புண்ணியமூர்த்தி,
மட்டக்களப்பு 


Add new comment

Or log in with...