Super Four: இந்தியாவை திணறவைத்தது ஆப்கான்; போட்டி சமநிலை | தினகரன்

Super Four: இந்தியாவை திணறவைத்தது ஆப்கான்; போட்டி சமநிலை

Super Four: இந்தியாவை திணறவைத்தது ஆப்கான்; போட்டி சமநிலை-AFGvIND-Super Four Match Tied

 

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பான ஆசிய கிண்ண ‘சுப்பர்–4’ போட்டி கடைசி ஓவரில் சமனிலையில் முடிவுற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வரும்  ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர்–4’ சுற்றில், இந்திய அணி நேற்று (25) சுப்பர் 4 சுற்றிற்கான தனது கடைசி போட்டியில், ஏற்கனவே சுற்றிலிருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது.

இந்திய அணிக்கு தோனி மீண்டும் தலைமை தாங்கும் வாய்ப்பு கிட்டியது. இது அவர் ஒரு நாள் அணிக்கு தலைமைத்துவம் வழங்கிய 200 ஆவது  போட்டியாகும் என்பதோடு, 696 நாட்களுக்கு பின்னர் அவர் இந்திய அணிக்கு தலைமைத்துவம் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Four: இந்தியாவை திணறவைத்தது ஆப்கான்; போட்டி சமநிலை-AFGvIND-Super Four Match Tied

இந்திய அணியின் தலைவர் ரோஹித், தவான், புவனேஷ்வர், பும்ரா, சஹாலுக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டதோடு, கலீல் அஹமட், சித்தார்த், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டேவுடன் அறிமுக வீரராக தீபக் சஹார் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு மொஹம்மட் சஷாட், ஜாவிட் ஜோடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். ஜாவிட் (05) முதலாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து ரஹ்மத் (03), ஹஷ்மதுல்லா (0), அஷ்கர் (0) அடுத்தடுத்து, ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தனர். ஒரு நாள் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள இந்திய அணிக்கு எதிராக சஷாட் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்து 124 ஓட்டங்களை பெற்றார். இது அவரது 5 ஆவது ஒரு நாள் சதமாகும்.

குல்பதின் 15, சத்ரான் 20, மொஹம்மட் நபி 64 ஓட்டங்களை பெற்றனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்கள் எடுத்தது. ரஷித் கான் (12), அப்தாப் (2) ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 03 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 253 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

Super Four: இந்தியாவை திணறவைத்தது ஆப்கான்; போட்டி சமநிலை-AFGvIND-Super Four Match Tied

லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு ஜோடி சிறந்த துவக்கத்தை வழங்கினர். முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 110 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ராயுடு (57) ஆட்டமிழந்தார். அரைச்சதம் எட்டிய ராகுல் 60 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி (08) நடுவரின் தவறான தீர்ப்பில் (LBW) ஆடுகளத்திலிருந்து திரும்பினார். மணிஷ் பாண்டே (8).,கேதர் ஜாதவ் (19) ஆட்டமிழக்க, அடுத்த சில நிமிடத்தில் கார்த்திக்கும் (44) வெளியேறினார்.

205 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து சஹார் (12) , குல்தீப் (9), சித்தார்த் (0) ஆட்டமிழந்தனர்.

இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்றது. 7 பந்துகளுக்கு 8 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் நிலையில் இந்தியாவும், ஒரு விக்கெட்டை எடுத்தால் வெற்றி எனும் நிலையில் ஆப்கானிஸ்தான் அணியும் இருந்தன.

அதனைத் தொடர்ந்து, ரஷித் கான் வீசிய இறுதி ஓவரில் வெற்றி பெற 7 ஓட்டங்கள் அவசியமானது. ஜடேஜா, முதல் பந்தில் எவ்வித ஓட்டத்தையும் பெறாத நிலையில், அடுத்த பந்தில் நான்கு ஓட்டமொனறை அடித்தார். 3 ஆவது பந்தில் 1 ஓட்டம் பெறப்பட்டது. 4வது பந்தில் கலீல் மேலும் 1 ஓட்டத்தை எடுத்தார்.

இறுதி இரு பந்துகளில் 1 ஓட்டம் தேவை என்றிருந்த நிலையில் ஓங்கி அடித்த ஜடேஜா (25) சத்ரானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 49.5 ஓவரில் 252 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. போட்டி சமனிலையானது. கலீல் (1) ஆட்டமிழக்காதிருந்தார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் திறமையாக விளையாடிய போதிலும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் இந்திய அணியின் வெற்றி கைநழுவியது.

நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த, நடுவர் கிரகரி பிராத்வைட் இனால், வழங்கப்பட்ட LBW முறை மூலமான ஆட்டமிழப்புகள் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ‘ரீப்ளேயில்’ பந்து விக்கெட்டை விட்டு விலகிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. தனக்கு வழங்கப்பட்ட LBW ஆட்டமிழப்பின்போது, ரிவிவ் செய்து. ராகுல் அதனை ஏற்கனவே வீணடித்தமை காரணமாக தோனி (8), தினேஷ் கார்த்திக் (44) ஆகிய இருவரும் மைதானத்திலிருந்து திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இடம்பெற்ற பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரு போட்டியில் வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (26) இடம்பெறும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி சுப்பர் 4 போட்டியில், வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் (28) இந்தியாவை எதிர்கொள்ளும்.

 


Add new comment

Or log in with...