20 ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் | தினகரன்

20 ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்துடன் மட்டுப்படுத்தப்படாது சர்வஜன வாக்கெடுப்புக்கும் விடப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக 20ஆவது திருத்தத்தைப் பயன்படுத்த இடமளிக்கக் கூடாது. இது விடயத்தில் மக்களின் கருத்தும் அறியப்பட வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பை எதிர்கொள்ள மக்கள் விடுதலை முன்னணி தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அநுரகுமார இதனைத் தெரிவித்தார்.

20ஆவது திருத்தச்சட்டமூலம் அரசியலமைப்பின் திருத்தம் என்ற அடிப்படையில் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக ஒத்துழைப்பை வழங்குவோம் என உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம். அரசியலமைப்பு செயற்பாடு சர்வஜன வாக்கெடுப்புக்கு அவசியமில்லை என உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தோம். தற்போதுள்ள அரசியலமைப்புக்கு முரண்படவில்லை என்பதால் அரசியலமைப்புக்கு உட்பட்டு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை நாம் தெரியப்படுத்தினோம். எனினும், இது விடயத்தில் எமது அரசியல் நிலைப்பாடு வேறுபட்டதாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் இந்த 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது பாராளுமன்றத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது பொது மக்களின் நிலைப்பாட்டை அறிய சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றாலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் நிலைப்பாடு அறியப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...