ஈரானுடன் வர்த்தகம் செய்ய ஐரோப்பா மாற்றுத் திட்டம் | தினகரன்

ஈரானுடன் வர்த்தகம் செய்ய ஐரோப்பா மாற்றுத் திட்டம்

அமெரிக்காவின் தடையை தவிர்த்து ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அந்த நாட்டுடன் அணு சக்தி உடன்படிக்கையில் கைச்சத்திட்ட எஞ்சிய நாடுகள் புதிய நடைமுறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.

இந்த புதிய முறையின்படி எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சந்தை மற்றும் டொலரை தவிர்த்து ஈரானுடன் தொடர்ந்த வர்த்தகத்தில் ஈடுபட வசதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த முறை எவ்வாறு செயற்படும் என்பது பற்றி சரியான விளக்கம் இன்னும் வெளியாகவில்லை.

ஈரானுடனான அணு சக்தி உடன்படிக்கையில் இருந்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலகியதை அடுத்து ஈரான்் மீதான அமெரிக்காவின் தடைகள் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்திலேயே ஈரானுடன் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது. இதில் ஈரான் தனது அணு செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு பகரமாக அந்த நாட்டின் மீதான தடைகளை தளர்த்த இணக்கம் ஏற்பட்டது.

இந்த உடன்படிக்கையில் தொடர்ந்து நீடிக்கும் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவுடன் ஐ.நாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைக்கான தலைவர் பெட்ரிக்கா மொகரினி புதிக திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “ஈரானுடனான சட்டபூர்வமான வர்த்தகத்தை உறுதிசெய்ய தமது வர்த்தக செயல்பாட்டாளர்களின் சுதந்திரத்தை பாதுகாக்க தீர்மானிக்கப்பட்டது” என்று வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பனப்பரிமாற்ற பொறிமுறை குறித்த விடயங்கள் நிபுணர்களால் கலந்துரையாடப்படும் என்று மொகரினி குறிப்பிட்டார்.

எனினும் இந்த புதிய பொறிமுறை அமெரிக்கா அதற்கு ஏற்ப தனது தடைகளை புதுப்பிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானுடனான உடன்படிக்கை ‘ஒருபக்கச் சார்பானது’, ‘பேரழிவானது’, ‘நான் பார்த்ததிலேயே மோசமானது’ என்று டிரம்ப் வர்ணித்திருந்தார்.

வரும் நவம்பரில் அமுலுக்கு வரவிருக்கும் ஈரான் மீதான பொருளாதார அழுத்தம் அந்த நாடு புதிய உடன்படிக்கை ஒன்றுக்கு வருவதற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று டிரம்ப் நம்புகிறார்.

ஈரானின் எண்ணெய்க்கான அமெரிக்காவின் தடை வரும் நவம்பரிலேயே அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புதிக கொள்கையால் ஈரான் நாணயத்தின் பெறுமதி பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.


Add new comment

Or log in with...