கன்னட மக்களால் மறக்க முடியாத தினம் | தினகரன்

கன்னட மக்களால் மறக்க முடியாத தினம்

ஜூலை 30, 2000... கன்னட மக்களால் மறக்க முடியாத திகதி. புதிய நூற்றாண்டு பிறந்து பாதி வருடத்தைக் கழித்த நிலையில் கர்நாடகம் சந்தித்த பேரதிர்ச்சி சம்பவம்தான் ராஜ்குமார் கடத்தல்.

தங்களது ஹீரோ, எதையும் சாதிக்கும் வல்லமை படைத்த மாவீரன், தங்களது பிரியத்துக்குரிய 'அண்ணாவரு' ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பதையே முதலில் கர்நாடக மக்கள் நம்பவில்லை. அதை விட முக்கியமாக, வீரப்பனால் கடத்தப்பட்டார் என்பதுதான் அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது.பெங்களூர் அல்லோகல்லப்பட்டது.

பெரும் குழப்பமாகப் போயிருந்தது. கோபத்தைக் காட்டினால், வன்முறையில் குதித்தால் ராஜ்குமாருக்கு வீரப்பனால் ஆபத்து வந்து விடுமே என்ற பயம் ஒரு பக்கம்...தங்களது கோபத்தைக் காட்டியே தீர வேண்டும் என்ற வேகம் மறுபக்கம்... தமிழ் மக்கள் அஞ்சி நடுங்கிய அவலம்.

தொட்டகாஜனூர்... இதுதான் ராஜ்குமார் கடத்தலின் ஆரம்பப் புள்ளி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட குக்கிராமம்தான் தொட்டகாஜனூர். கர்நாடக எல்லையில் உள்ள தமிழகப் பகுதி. இங்குதான் ராஜ்குமாரின் பண்ணை வீடு உள்ளது. இங்கு வைத்துத்தான் அவரைக் கடத்தினார் வீரப்பன். சினிமா பாணி கடத்தல் அது!

நடந்தது என்ன என்பதை ராஜ்குமாரின் மனைவி மறைந்த பர்வதம்மா விளக்கினார்.

"நாங்கள் புதிதாகக் கட்டியுள்ள பண்ணை இல்லத் திறப்பு விழாவுக்காக காஜனூர் சென்றிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி இருக்கும். நாங்கள் 15 பேர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது வீரப்பன் கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தது. வீரப்பனே கடத்தல் கும்பலுக்குத் தலைமை தாங்கி வந்தான்.

வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் 'ராஜ்குமார் எங்கே' என்று கேட்டதும் நாங்கள் அப்படியே அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தோம். அப்போது ராஜ்குமாரே, தான் வீரப்பனுடன் வந்து விடுவதாகவும், வீட்டிலுள்ளவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

வீரப்பன் என்னிடம் ஓடியோ நாடாவைக் கொடுத்தான்.

அவன் தமிழில் பேசினான். 'தமிழ் தெரியுமா' என்று என்னிடம் கேட்டான். நான் 'ஆமாம்' என்றேன். முதலில் அக்கும்பல் அங்கிருந்த கோவிந்தராஜ், நாகப்பா ஆகியோரைப் பிடித்துக் கொண்டது. மொத்தம் பத்தே நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது. வீட்டில் நிறைய நாய்கள் இருந்தும் கூட பெரிய மழை பெய்து கொண்டிருந்ததால், உதவிக்கும் யாரையும் அழைக்க முடியவில்லை. வீரப்பன் ஆட்கள் எப்படி வந்தனர், எப்படிப் போனார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் வாகனம் இருந்ததா என்றும் தெரியவில்லை" என்றார் பர்வதம்மா.

அதன் பிறகு நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வீரப்பன் பர்வதம்மாவிடம் ஒலிநாடா கொடுத்து அனுப்பியிருந்தார்.

அதில் அவர் வைத்த கோரிக்கைகளை விளக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர்கள் கருணாநிதி, எஸ்.எம்.கிருஷ்ணா இருவரும் களத்தில் இறங்கினர்.

ஆனால் 100 நாட்களைக் கடந்த பிறகுதான் ராஜ்குமாரால் வெளியே வர முடிந்தது. எத்தனையோ நூறு நாள் படங்களைக் கொடுத்தவர் ராஜ்குமார். கடைசியில் இந்த கடத்தல் நாடகமும் நூறு நாள் கடந்ததும் கூட ராஜ்குமாரின் வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய அம்சமாக மாறிப் போனது!


Add new comment

Or log in with...