நெல்சன் மண்டேலாவிடம் கற்க வேண்டிய பாடங்கள் | தினகரன்

நெல்சன் மண்டேலாவிடம் கற்க வேண்டிய பாடங்கள்

உலகில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளுக்கிடையிலும், வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையிலும் அண்மைக் காலமாக கசப்புணர்வுகளும், முரண்பாடுகளும் வளர்ந்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா ஒருவித கொள்கையை முன்னெடுக்கின்ற அதேநேரம் ரஷ்யா அதனோடு முரண்படக் கூடிய கொள்கையையும், நிலைப்பாடுகளையும் முன்னெடுக்கின்றது.

இந்த முரண்பாடு நாடுகளுக்கிடையிலும் தோற்றம் பெற்று வருகின்றது. இதன் வெளிப்பாடாக ஒரு சில நாடுகள் டொலரிலிருந்து வெளியேறி தம் சொந்த நாணயத்தில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடவும்ஆரம்பித்திருக்கின்றன. உலக நாடுகள் மத்தியில் தோற்றம் பெற்று வரும் இந்த முரண்பாடுகள் நாடுகளை அணிகளாகவும் குழுக்களாகவும் செயற்படும் நிலைக்கு இட்டுச் செல்லும் நிலைமையும் உருவாக்கி வருகிறது.

ஆனாலும் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நீடித்து வந்த இராஜதந்திர முரண்பாடுகள் சமரச நிலையை அடைந்துள்ள நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலும், அமெரிக்காவுக்கும் துருக்கிக்குமிடையிலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலும் என்றபடி முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. உலக நாடுகள் மத்தியில் இவ்வாறான நிலைமை வளர்ச்சி பெறுவது ஆரோக்கியமானதல்ல. இந்நிலைமை தொடர்ந்து நீடித்து வளர்ச்சி பெறுமாயின் அவை மற்றொரு உலக மகா யுத்தத்துக்கு இட்டுச் செல்லுமோ என்ற அச்சம் உலக சமாதான ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்கள் உருவாக முன்னர் உலக நாடுகள் எவ்வாறு அணிகளாகச் சேர்ந்து செயற்படத் தொடங்கினவோ அவ்வாறான ஒரு சூழல் அண்மைக் காலமாக உருவாகி வருகின்றது. இவ்வாறான ஒரு நிலைமை உருவாவதற்கு, சமாதானம், மனிதாபிமானம், சகிப்புத் தன்மை போன்ற பண்புகளில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியே அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றது.

இதனை உலகின் பல முன்னணி புத்திஜீவிகளும் கூட சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் உலக மக்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் உலகத் தலைவர்கள் மத்தியிலும் சமாதானம், சகவாழ்வு, மனிதாபிமானம், சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் மேலோங்க வேண்டும். அவையே உலகில் சுபீட்சத்துக்கு அடித்தளமாக அமையும். என்றாலும் இவற்றில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியானது அவற்றை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையை உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இதன் விளைவாக சமாதானம், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் மனிதாபிமானத்துக்கு முன்னுதாரணமாக விளங்கிய நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அவர் 20ஆம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் உலகிற்கு சமாதானம், சகவாழ்வு மனித நேயம், சகிப்புத் தன்மைக்கு முன்னுதாரணத்தை வழங்கினார். அவர் இவை தொடர்பில் பல முக்கிய பாடங்களை உலகுக்கு கற்றுக் கொடுத்தார். அவர் வழங்கிய பாடங்களை உலகம் திரும்பிப் பார்க்க வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது. அதன் தேவையும் அவசியமும் பரவலாக உணரப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சமாதான உச்சி மாநாட்டை அதன் தலைமையகத்தில் ஏற்பாடு செய்து நடத்தியது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் 73வது வருடாந்த அமர்வுக்கு முதல் நாளே இம்மாநாடு நடாத்தப்பட்டது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றினார்.

அவர் தமதுரையில் “சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானம் குறித்து உலகுக்கு முக்கிய பல பாடங்களை நெல்சன் மண்டேலா கற்றுக் கொடுத்துள்ளார். அந்த உன்னத ஆளுமையிடம் உலகத் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

உலகத் தலைவர்கள் கூடியிருந்த இந்த சர்வதேச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அழைப்பை விடுத்ததன் ஊடாக அவர் உலக வரலாற்றில் தனியிடம் பதித்து விட்டார்.

நெல்சன் மண்டேலா பயணித்த பாதை குறித்து இன்று உலகம் கவனம் செலுத்துவதற்கு தள்ளப்பட்டிருப்பதற்குக் காரணம் அவ்வாறான பாதையில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதன் விளைவேயாகும். அவர் சமாதானம், நல்லிணக்கம், மனித நேயத்துக்கு மாத்திரமல்லாமல் மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதிலும், அதிகாரத்தில் மோகம் கொள்ளாமையிலும் உலகுக்கு முன்மாதிரி வழங்கியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் நிற ஒதுக்கல் இனப்பிரச்சினைக்கு எதிராகப் போராட்டத்தை ஆரம்பித்த மண்டேலா இரு தசாப்தகாலம் சிறைத் தண்ட​ைனயையும் கூட அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையான அவர் தேர்தலில் போட்டியிட்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

தென்னாபிரிக்காவில் நீடித்து வந்த நிற ஒதுக்கல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் கையாண்ட நடவடிக்கைகளும் முயற்சிகளும் வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன. அதனூடாக தென்னாபிரிக்காவில் நிலைபேறான அமைதி, சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலைமையை ஏற்படுத்துவதற்கு அவர் கையாண்ட நடவடிக்கைகள், முயற்சிகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளன.

அந்த அடிப்படையில் இலங்கையில் பல தசாப்தகாலங்களாக நீடித்து நிலவிய இன முரண்பாட்டுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் கூட முன்னெடுக்கப்பட்டன.

ஆகவே ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளது போன்று சமாதானம், நல்லிணக்கம், மனிதாபிமானம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை என்பவற்றுக்கு முன்னுதாரணம் வழங்கிய நெல்சன் மண்டேலாவின் வாழ்வில் உலகத் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும். அத்தோடு உள்நாட்டு அரசியல் தலைவர்களும் முன்மாதிரிகளைப் பெற்று-க் கொள்ள வேண்டும். அவை உலகிற்கு மாத்திரமல்லாமல் இந்நாட்டிலும் கூட அமைதி, சமாதானம், சுபீட்சம் ஏற்பட அடித்தளமாக அமையும்.


Add new comment

Or log in with...