சீனா, அமெரிக்காவின் பரஸ்பரம் புதிய சுற்று வரி விதிப்பு அமுல் | தினகரன்

சீனா, அமெரிக்காவின் பரஸ்பரம் புதிய சுற்று வரி விதிப்பு அமுல்

இரு பெரும் பொருளாதாரங்களின் வர்த்தகப் போர் உச்சம்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய சுற்று வரிகள் நேற்று அமுலுக்கு வந்தன.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேஸ்போல் கையுறைகள் மற்றும் ஒருபகுதி தொழிற்சாலை இயந்திரங்கள் உட்பட சீன உற்பத்திகள் மீதான அமெரிக்காவின் வரிகள் அமுலுக்கு வந்ததோடு அமெரிக்காவில் உற்பத்தியாகும் இரசாயன பொருட்கள், ஆடைகள் மற்றும் கார் வண்டி உதிரிப்பாகங்கள் மீது சீனாவில் வரி நடைமுறைக்கு வந்துள்ளது.

200 பில்லியன் டொலர் பெறுமதியான சீன உற்பத்திகளுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி அறிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க உற்பத்திகளுக்கு வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

டிரம்பின் அறிவிப்பு வெளியாகி அடுத்து தினம் சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பதில் நடவடிக்கையாக நாமும் வரி விதிப்பதைத் தவிர வேறு தேர்வு இல்லை” என்று குறிப்பிட்டது. இதன்படி 5,200 அமெரிக்க உற்பத்திகளுக்கு ஐந்து அல்லது 10 வீதம் வரி விதிப்பதாக சீனா அறிவித்தது.

அமெரிக்காவுடனான இந்த இறக்குமதி வரி மோதல் தொடர்பில் உலக வர்த்தக அமைப்பிடம் புதிய முறைப்பாட்டை செய்யவிருப்பதாக சீனா கூறியது.

இந்த இரு நாடுகளும் அடுத்த நாட்டின் மீது ஏற்கனவே 50 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதற்காக சீன பாதுகாப்பு அமைச்சின் ஒரு பிரிவு மீது அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை தடை விதித்தது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன் வர்த்தக உடன்படிக்கை ஒன்று எட்டப்படாவிட்டால் இறக்குமதி வரிகள் மேலும் 25 வீதமாக அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இம்மாத இறுதியில் வொஷிங்டனில் இடம்பெறும் சந்திப்பில் இது தொடர்பில் உடன்பாடு ஒன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் டிரம்ப் நிர்வாகத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை சீனா கடந்த சனிக்கிழமை கைவிட்டது. இந்நிலையில் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்காவின் இடைக்கால தேர்தலுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

சீனாவின் வர்த்தகக் கொள்கைகளை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதாகவே இந்த வரிகள் கொண்டுவரப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இந்த வர்த்தகக் கொள்கைகள் அமெரிக்காவின் ஆரோக்கியமான மற்றும் சுபீட்சமான பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிடுகிறார்.

இந்த வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெறும் என்று அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை பொக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

எனினும் இந்த புதிய வரி விதிப்புகளால் விலை உயர்வின் வலியை அமெரிக்கக் குடும்பங்கள் உணர ஆரம்பிக்கும். இந்த நடவடிக்கையால் தங்கள் செலவு கூடும் என்றும், வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூறியுள்ளன.

மறுபுறம் சீனா அமெரிக்காவிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதை விடவும் அதிகம் விற்பனை செய்யும் நிலையில் இந்த வர்த்தகப் போரில் அந்த நாட்டின் பதில் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...