எதிர்க்கட்சியின் இப்ராஹிம் வெற்றி | தினகரன்

எதிர்க்கட்சியின் இப்ராஹிம் வெற்றி

தோல்வியை ஒப்புக்கொண்டார் யாமீன்

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராஹிம் மொஹமது சோலிஹ் வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பாக தேர்தலின் ஆரம்பக்கட்ட முடிவுகளின்படி இப்ராஹிம் மொஹமது 134,616 வாக்குகளை வென்றிருப்பதோடு யாமீன் 96,132 வாக்குகளையே கைப்பற்றியுள்ளார்.

தீவுக் கூட்டங்களைக் கொண்ட மாலைதீவில் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் யாமீன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிராந்தியத்தில் சீனா மற்றும் அமெரிக்காவின் பிரதான மோதல் இடமாக மாலைதீவு மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்ராஹிம் மொஹமதுவின் வெற்றிக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளன.

யாமீன் சீனாவுடன் நெருக்கம் கொண்டது இந்திய கடலில் அண்மைய ஆண்டுகளில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்க காரணமாக இருந்தது.

யாமீன் ஆட்சிக் காலத்தில் மாலைதீவில் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சிறைவைக்கப்பட்டனர். இந்நிலையில் மாலைதீவு ஜனநாயக சூழலில் முன்னெற்றம் ஏற்படாவிட்டால் அந்த நாட்டின் மீது தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தலுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தன.

தேர்தல் முடிவை அடுத்து இப்ராஹிம் மொஹமதுவின் ஆதரவாளர்கள் கடந்த ஞாயிறு இரவு தொடக்கம் வீதிகளில் இறங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

“இந்த செய்தி உரத்ததாகவும் தெளிவாகவும் உள்ளது. மாலைதீவு மக்கள் மாற்றம், அமைதி மற்றும் நீதியை விரும்புகின்றனர்” என்று இபு என்று பரவலாக அறியப்படும் இப்ராஹிம் மொஹமது தலைநகர் மாலேவில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய யாமீன், தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராஹிம் மொஹமதுவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, தனது செயற்பாடுகளையும் நியாயப்படுத்தினார்.

தற்போதைய ஜனாதிபதி யாமீன் இந்த தேர்தலில் மற்றொரு தவணைக்கு வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டதோடு அவருக்கு ஆதரவாக தேர்தல் மோசடி இடம்பெறும் என்று அவதானிகள் நம்பினர். இந்த தேர்தலில் 89 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றது.

“தேர்தலை பாதிக்கும் வகையில் வாக்கு எண்ணும் நடவடிக்கை மற்றும் வாக்காளர் பட்டியிலில் எந்த ஒரு பெரிய விடயமும் பதிவாகவில்லை” என்று வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாலேவில் உள்ள எதிர்க்கட்சியின் பிரதான தேர்தல் பிரசார மையத்தில் ஞாயிறு இரவு நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி “இபு, இபு, இபு” என்று கோசமெழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டை விட்்டு வெளியேறி இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத், “சொலிஹ் மாலைதீவு மக்களுக்காக மிக்கச் சிறந்த சேவையை செய்திருக்கிறார்” என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மாலைதீவில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதியான நஷீத் 2012 ஆம் ஆண்டு பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது இலங்கையில் இருக்கும் நஷீதுக்கு தேர்தல் முடிவை அடுத்து இலங்கையில் வசிக்கும் மாலைதீவு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு ஆரம்பமானதோடு நீண்ட வரிசை காரணமாக திட்டமிடப்பட்ட நேரத்தை விடவும் மூன்று மணி நேரம் கழித்தே வாக்குப்பதிவு முடிந்தது.

அதிகாரபூர்வ தேர்தல் முடிவு இன்னும் ஒருவாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான 54 வயதான இப்ராஹிம் மொஹமது சோலிஹ், பல ஆண்டுகளாக ஜனநாயக சீர்திருத்தத்தில் ஈடுபட்டு வந்தவராவார்.

மாலைதீவு ஜனநாயக கட்சி, ஜூம்ஹொரி கட்சி மற்றும் அதாலத் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகளுடனான கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

மலைதீவு ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற தலைவராக 2011ஆம் ஆண்டிலிருந்து சோலிஹ் இருந்து வருகிறார்.

யாமீனின் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த பின் வரும் நவம்பர் 17 ஆம் திகதி சோலிஹ் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்று நம்பப்படுகிறது.

அரசியல் பதற்றம்

26 பவளத்திட்டுகள், 1,192 தீவுகள் கொண்டதாக மாலைதீவு உள்ளது. இங்கு 400,000க்கும் அதிகமான மக்கள் வசிப்பதோடு காலநிலை மாற்றத்தால் இந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுலாத்துறையே நாட்டின் பிரதான வருவாயாக உள்ளது.

எனினும் அண்மைய ஆண்டுகளில் மாலைதீவில் அரசியல் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த பெப்ரவரியில் முன்னாள் ஜனாதிபதி நஷீத் உட்பட ஒன்பது அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் நீக்கியது.

இதனைத் தொடர்ந்து நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்த ஜனாதிபதி யாமீன் இந்த தீர்ப்பை வழங்கிய இரு நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டதோடு தீர்ப்பும் திரும்பப்பெறப்பட்டது.

இதன்போது யாமீனின் ஒன்றுவிட்ட சகோதரரும் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியுமான மாமூன் அப்துல் கயூமும் கைது செய்யப்பட்டார்.

யாமீன் தனது ஆட்சிக்கு எதிரான எந்த ஒரு எதிர்ப்பையும் சகிப்பவரல்ல என்பதற்கான சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது. எனினும் இந்த சம்பவங்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியாவின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்த சர்ச்சை சிறு தீவுகள் மீது இந்தியா தலையிட அழுத்தம் ஏற்படுத்தியதோடு, முன்னாள் ஜனாதிபதி நஷீதும் இந்திய இராணுவம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இப்ராஹிம் மொஹமதுவின் வெற்றியை அடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பொன்றில், “ஞாயிறு தேர்தல் மாலைதீவு ஜனநாயகத்தின் வெற்றி மாத்திரமன்றி ஜனநாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் உறுதியான கடப்பாட்டை காட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் செல்வாக்கு

இந்திய கடலில் புதிய வர்த்தகப் பாதையை உருவாக்க முயலும் சீனா மாலைதீவில் அதிக முதலீடுகளை செய்து செல்வாக்கு செலுத்த ஆரம்பித்திருப்பதோடு இது இந்தியாவின் அவதானத்தை பெற்றுள்ளது.

யாமீனின் ஆட்சியில் பிரமாண்ட திட்டங்களுக்காக சீனாவின் நிதி வரவேற்கப்பட்டதோடு சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. இந்நிலையில் வேறு எந்த நாட்டை விடவும் அதிக சீன சுற்றுலா பயணிகள் மாலைதீவை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மாலைதீவில் ஏற்படும் ஆட்சி மாற்றம் தமது நலனுக்கு பாதகமாக அமையும் என்று சீனா அஞ்சுவதாக அவதானிகள் நம்புகின்றனர்.

மறுபுறம் யாமீன் பிராந்திய எதிரி நாட்டின் பக்கம் சாய்ந்திருப்பதால் இந்தியா எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சீனாவின் முதலீடுகள் குறித்து மீள்பரிசீலை செய்யப்படும் என்று எதிர்க்கட்சி கூட்டணி தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தது.


Add new comment

Or log in with...