தலைவர் பதவியில் இருந்து விலகிய அஞ்சலோ மெத்திவ்ஸ் எச்சரிக்கை | தினகரன்

தலைவர் பதவியில் இருந்து விலகிய அஞ்சலோ மெத்திவ்ஸ் எச்சரிக்கை

அஞ்சலோ மெத்திவ்ஸ் ஒருநாள் மற்றும் 20 க்கு இருபது அணிகளின் தலைமை பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் விலகினார்.

இது தொடர்பாக அஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வுகுழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் தன்னை ஒருநாள் மற்றும் 20க்கு இருபது அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்திந்த படுதோல்வியின் முழுப்பொறுப்பும் தன் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தோல்வியின் ஒரு பங்காளியே தான் என்றும், அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அஞ்சலோ மெத்திவ்ஸ் குறிப்பிட்டுள்ளார். சுமார் 5 வருடங்களாக இலங்கை அணியின் தலைவராக கடமையாற்றிய தான் கடந்த 2017ம் ஆண்டு பதவி விலகியதாகவும், குறித்த காலப்பகுதியில் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர், தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுவின் கோரிக்கைக்கு அமைய ஒருநாள் மற்றும் 20க்கு இருபது அணித்தலைவராக மீண்டும் பொறுப்பேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் அணிக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளதாக குறித்த கடிதத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அணிக்கு தகுதியற்றவர் என குறிப்பிடப்படுமிடத்து அணியில் இருந்து விலகவும் தயாராக உள்ளேன் என அஞ்சலோ மெத்திவ்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனது மனச்சாட்சியின் அடிப்படையில் தனது ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடிதத்தின் இறுதியில் அண்மையில் தென் ஆபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் கூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...