இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பணிக்குழாமின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ரூபா 2 கோடி (ரூ. 20 மில்லியன்) இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட குறித்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
தலா ரூபா ஒரு இலட்சம் ரொக்கம் மற்றும் ரூபாய் 20 இலட்சம் கொண்ட சரீரப் பிணைகள் மூன்றின் அடிப்படையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான இரும்புகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பில் ரூபா 54 கோடியை இலஞ்சமாக பெறுவதற்கு முயன்றுள்ளதோடு, கடந்த மே 03 ஆம் திகதி அதற்கான முற்பணமாக ரூபா 2 கோடி பணத்தை, கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வாகன தரிப்பிடத்தில் வைத்து கைமாற்றிய போது, இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Add new comment