Home » அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்!

அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்!

by sachintha
December 1, 2023 6:09 am 0 comment

மனிதர்கள், சடப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் படைத்தவன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் ஆவான். அவனை நம்பிக்கை கொள்ளுமாறும் தொடர்பினை பேணிக்கொள்ளுமாறும் வழிகாட்டியுள்ள அவன் இதற்காக வணக்கங்களையும் வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் காட்டித்தந்துள்ளான். அல்லாஹ் எமக்கு மிகவும் நெருக்கமானவன்.

‘நபியே..! எனது அடியார்கள் என்னைப்பற்றி கேட்டால் இதோ நான் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறேன். ஒரு அழைப்பாளர் என்னை அழைத்தால் அதற்கு நான் பதிலளிப்பேன். எனவே அவர்கள் என்னிடமே பதிலைக் கேட்கட்டும். என்னையே நம்பிக்கை கொள்ளட்டும். இதன் மூலமாக அவர்கள் நேரான பாதையை அடைந்துவிடுவார்கள்’ என்று கூறுங்கள் (அல் குர்ஆன் 02:186) என்பதாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அப்படியிருக்கையில் அல்லாஹ்வோடு தொடர்புபடுவதற்கு உள்ளங்களைத் தடுப்பவை எவை? அவனை அறிந்துகொள்வதற்கு என்னென்ன விடயங்கள் தடையாக உள்ளன? அவனை நெருங்குவதற்கான தடைகள் என்ன? நாம் ஏன் விலகியிருக்கிறோம். அல்லாஹ்வுடனான உறவை நாம் ஏன் துண்டித்துக் கொண்டிருக்கிறோம். அவனுடனான உறவை ஏன் தொடராமல் இருக்கிறோம்? இவ்வாறான கேள்விகளுக்கு அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான். ‘அவர்கள் செய்துகொண்டிருந்தவை அவர்களது உள்ளங்கள் மீது துருவாகப் படிந்துவிட்டன’ (83:14).

அதுதான் உண்மை. அவர்களது உள்ளங்கள் துருப்பிடித்தமைதான் அல்லாஹ்வுக்கும் அவர்களுக்குமிடையிலான தொடர்பினை அறுத்திருக்கிறது. அவனுடனான உறவின் நெருக்கத்தை தூரமாக்கியுள்ளது. இதுவே அல்லாஹ்வை நெருங்குவதைத் தடுக்கும் முக்கிய தடையாகும்.

ஆனால் படைப்பாளனுக்கும் படைப்புகளுக்குமிடையில் தொடர்பும் உறவும் இருப்பது இன்றியமையாததாகும். அதனால் அல்லாஹ்வுடனான உறவின் வாயிலைத் திறப்பதற்கு பாரிய முயற்சியை முன்னெடுக்க வேண்டும். இம்முயற்சி ஆளுக்காள் வேறுபடலாம். குறிப்பாக உள்ளத்தைச் சூழ தூவப்பட்டுள்ள நச்சின் அளவிற்கு ஏற்ப அது வேறுபடலாம். மனதில் படிந்துள்ள அலட்சியம், பொடுபோக்கு, இருள்கள் போன்றவற்றின் அளவு அவற்றை நீக்குவதற்கான முயற்சியின் அளவை தீர்மானிக்கும்.

இது பூமிக்கு அடியில் மறைந்துள்ள பொக்கிஷத்தை போன்றது. இதனை சிலர் அவசரமாக அடைந்துகொள்ளலாம். வேறு சிலர் பெரிய முயற்சியும் நீண்ட காலமும் தேவைப்படலாம். உயிரோட்டமான உள்ளங்கள் இதனை விரைவாகவே அடைந்துவிடும்.

ஒருவர் அல்லாஹ்வுடனான உறவை அடைந்து கொண்டுள்ளதை அறிந்து கொள்ள சில அடையாளங்கள் காணப்படும். அதனை அல்குர்ஆன் தெளிவாக முன்வைக்கிறது.

அல்குர்ஆன் மூலம் கிடைக்கும் தெளிவு

‘மரணித்திருந்தவனை நாம் உயிர்ப்பித்து அவனுக்கு பிரகாசத்தையும் கொடுத்தோம். அதன் மூலம் அவன் மனிதர்களிடையே நடமாடிக்கொண்டிருக்கிறான். இத்தகையவனை இறைமறுப்பு (குப்ர்) என்ற இருளில் சிக்கி வெளியேற முடியாத நிலையில் உள்ளவனுடன் ஒப்பிட முடியுமா? ஒருபோதும் முடியாது. இவ்வாறுதான் நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்துகொண்டிருப்பவைகள் அலங்காரமாக காட்டப்படுகின்றன’.

(6:122)

மரணித்திருந்தவன் உயிர்ப்பிக்கப்படுகிறான். அதாவது வழிகேட்டில் இருந்தவன் அல்குர்ஆன் என்ற அறிவின் மூலம் பிரகாசம் பெறுகிறான். நேர்வழியை அடைந்த மனிதன் மக்கள் மத்தியில் தைரியமாக நடமாடுகிறான். அடுத்த புறமாக இருளில் சிக்கியுள்ளவன், வழிகேட்டில் இருப்பவன் அதிலிருந்து வெளியேற முடியாதவன். இருசாராரையும் ஒப்பிட முடியுமா? நிராகரிப்பாளர்கள் செய்துகொண்டிருந்த விடயங்கள் காரணமாக இருளில் தட்டுத்தடுமாறுவது அவர்களுக்கு அலங்காரமாக விளங்குகிறது.

இஸ்லாத்தில் அதிக ஆர்வம்

‘யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட விரும்புகின்றானோ இஸ்லாத்துக்காக அவரது உள்ளத்தை விசாலமாக்கிக் கொடுப்பான்’ (6:125) என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். அப்போது ‘விசாலமாக்கிக் கொடுத்தல்’ என்றால் என்ன? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘இது உள்ளத்தில் ஏற்படுத்தப்படும் பிரகாசமாகும். அப்போது அவருக்காக அவரது உள்ளம் திறந்துகொடுக்கும்’ என்றார்கள். ‘அதனை அடையாளம் கண்டு கொள்ள அடையாளங்கள் ஏதும் உள்ளனவா?’ எனக் கேட்கப்பட்ட போது, ‘ஆம்’ என்று குறிப்பிட்ட நபியவர்கள், ‘அவர் நிரந்தரமான உலகை நோக்கிச் செல்வார். மதிமயக்கக்கூடிய உலகிலிருந்து விலகிச் செல்வார். மரணம் ஏற்படுவதற்கு முன்னரே மரணத்துக்காக தன்னை தயாராக வைத்துக்கொள்வார்’ என்றார்கள்.

(ஆதாரம்: இப்னு அபீ ஷைபா, பைஹகி)

உள்ளத்தில் ஏற்படும் நடுக்கம்

இறைத் தொடர்பின் மற்றொரு அடையாளம் தான் அல்லாஹ் ஞாபகப்படுத்தப்படும் போது உள்ளத்தில் பீதியும் திடுக்கமும் ஏற்படுவதாகும். ‘முஃமின்கள் எத்தகையவர்கள் என்றால் அல்லாஹ் ஞாபகப்படுத்தப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுநடுங்கும். இறை வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுவார்கள்’. (8:02)

அல்லாஹ் ஞாபகப்படுத்தப்படும் போது உள்ளத்தில் ஏற்படும் திடுக்கம் வாழ்க்கை சரியான இடத்தை நோக்கி வந்துவிட்டது, சரியான இடத்தில் அது நிலைத்துவிட்டது என்பதுதான் இதன் அர்த்தமாகும்.

இறையச்சம்

அல்லாஹ் ஞாபகப்படுத்தப்படும் போது உள்ளச்சம் ஏற்படுவதும் இறை தொடர்பின் அடையாளமாகும். ‘அல்லாஹ் நினைவுபடுத்தப்படும் போதும் அல்குர்ஆன் அருளப்படும் நிலையிலும் உள்ளங்களில் உள்ளச்சம் ஏற்படும் நிலை அல்லாஹ்வை ஆழமாக நம்பியவர்களுக்கு ஏற்படவில்லையா?…

(57:16)

உணர்வோடு கருத்துணர்ந்து தொழும்போது, உள்ளம் விழிப்புடன் இருக்கும் உள்ளச்சத்தை எம்மால் உணர முடியும்.

ஈமானின் சுவையை உணர்தல்

இறை தொடர்பினை பேணிக்கொள்கின்ற உயிரோட்டமான உள்ளத்தின் இன்னுமொரு அடையாளம்தான் ஈமானின் சுவையை உணர்வதாகும். இது வாழ்வில் கிடைக்கின்ற மிகப்பெரியதொரு உணர்வு.

‘மூன்று விடயங்கள் யாரிடம் இருக்கின்றதோ அவர் அதன் மூலம் ஈமானின் சுவையை உணர்ந்து கொள்வார். அல்லாஹ்வும் அவனது தூதரும் யாருக்கு மிக விருப்பத்துக்கு உரியவராக இருக்குமோ அத்தகையவர் ஆவார். அல்லாஹ்வுடைய திருப்தியை நாடி ஒரு மனிதனை நேசிப்பவர். இறை நிராகரிப்பிலிருந்து மீண்டதன் பின்னர் மீண்டும் அதன்பால் செல்வதை நெருப்பில் எறியப்படுவது போன்று வெறுப்பவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம்-: புஹாரி, முஸ்லிம்)

இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் இதுபற்றிக் குறிப்பிடும்போது, ‘ஈமானின் சுவையை தொழுகையில், அல்குர்ஆனில், இறை நினைவு என்ற திக்ரில் என்ற மூன்று விடயங்களில் தேடுங்கள். இவற்றில் உங்களுக்கு சுவை கிடைத்துவிட்டால் சந்தோஷமாக தொடர்ந்து பயணம் செய்யுங்கள். உங்களுக்கு நன்மாராயணம் கூறிக்கொள்கிறேன். அவற்றில் ஈமானிய சுவை கிடைக்காது விட்டால் உங்களது கதவு மூடப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளுங்கள்.

(ஆதாரம்-: ஹில்யதுல் அவ்லியா)

இவை அல்லாஹ்வுடனான உறவை பேணுவதற்கான சில வழிகாட்டல்களாகும். இவற்றைப் பேணி இறை தொடர்பை மேம்படுத்திக் கொள்வோம்.

அஷ் ஷெய்க் யூ.கே றமீஸ்…

எம்.ஏ. (சமூகவியல்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT