என்டர்பிரைஸ் லங்கா; 23 ஆயிரம் பேருக்கு ரூ.49ஆயிரம் மில். இலகு கடன் | தினகரன்

என்டர்பிரைஸ் லங்கா; 23 ஆயிரம் பேருக்கு ரூ.49ஆயிரம் மில். இலகு கடன்

அரசாங்கத்தின் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் மூலம் 23 ஆயிரம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுமார் 49 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம் இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

புதிதாக ஒரு இலட்சம் தொழில்வாண்மையாளர்களை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் மூலமாகவே அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுக்கூடாக இக்கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இலகு வட்டியடிப்படையில் கடன் வழங்கும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதியும் பிரதமரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். புதிய தொழில்வாண்மையாளர்களை உருவாக்கும் நோக்கில் 16 வகையான கடன் வழங்கும் திட்டங்கள் இதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்டன. இக்கடன் திட்டத்தின் வட்டி முழுவதும் அல்லது வட்டியின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்பதே இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் என்டர்பிரைஸ்ஸ்ரீலங்காவூடாக சுய தொழிலாளர் முதல் பெரிய தொழில் வாண்மையாளர் வரை 50 ஆயிரம் ரூபாய் முதல் 750 மில்லியன் ரூபாய் வரை இலகு வட்டியடிப்படையில் கடனாக வழங்கப்படுகிறது.

இலங்கை வங்கியே இத்திட்டத்தின் கீழ் ஆகக்கூடியதாக 11 ஆயிரத்து 807 பேருக்கு கடனை பெற்றுத் தந்துள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக பிரதேச அபிவிருத்தி வங்கிகளால் 5 ஆயிரத்து 612 பேருக்கும் தேசிய சேமிப்பு வங்கியால் 2 ஆயிரத்து 983 பேருக்கும் மக்கள் வங்கியால் ஆயிரத்து 402 பேருக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளன.

கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் வட்டி வழங்குவதற்காக மட்டும் 2018 வரவு செலவுத் திட்டத்தில் 5 ஆயிரத்து 300 மில்லியனிலும் அதிக பெறுமானம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் இக்கடன் வழங்கும் திட்டம் சீராக முன்னெடுக்கப்படுகிறதா என்பதனை கண்டறிவதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார். அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுக்கூடாக இதுவரை 22 ஆயிரத்து 957 பேருக்கு 49 ஆயிரத்து 176 மில்லியன் ரூபாய் இலகு வட்டியடிப்படையில் கடனாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...