Thursday, March 28, 2024
Home » இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள்

இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள்

by sachintha
December 1, 2023 12:11 pm 0 comment

இஸ்லாம் பெண்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு அவற்றை உறுதிப்படுத்தியும் உள்ளது. குறிப்பாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே முக்கியமானது என்றுள்ளது இஸ்லாம்.

இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை சரித்திர ஆசிரியர்கள், ‘அறியாமைக் காலம்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அக்காலத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர். பண்டைய அரபு மக்கள் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிரோடு புதைத்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப் பிறகு இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அதேநேரம் வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொல்லும் பழக்கமும் அன்றிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அல்லாஹ்தஆலா, ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்’ (அல் குர்ஆன் 17:31) என்று குறிப்பிட்டுள்ளான்.

மேலும் வறுமையைத் தவிர மடமையின் காரணமாகவும் அக்கால மக்கள் குழந்தைகளைக் கொல்பவர்களாக இருந்தனர். அதையும் அல்லாஹ்தஆலா, ‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும் அல்லாஹ் அவர்களுக்கு (உண்பதற்கு ஆகுமாக்கி)க் கொடுத்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் திட்டமாக நஷ்டமடைந்து விட்டார்கள். அவர்கள் வழி கெட்டு விட்டனர்’. (6:140) என்று குறிப்பிட்டு தடை செய்துள்ளான்.

அதேநேரம் மூடநம்பிக்கைகளின் பெயரிலும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்று இருந்தது. இதை அல் குர்ஆன், ‘இவ்வாறே இணைவைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன’ (6:137) என்று குறிப்பிட்டுள்ளன.

இவ்வாறு வறுமை, மடமை, மூடநம்பிக்கை என்பவற்றின் காரணமாக குழந்தைகளைக் கொல்லக்கூடாது என்று இறைவன் தனது வசனங்களை இறக்கி தடை செய்தான். மேலும் நபி (ஸல்) அவர்கள், ‘எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து தேவைகளை நிறைவேற்றி கருணை காட்டி வருவாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘இரு பெண் மக்கள் இருந்தாலுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்’ என்று பதில் கூறினார்கள். (நபிமொழி)

இஸ்லாம் ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ அல்லது மயக்க நிலையில் இருக்கும் போதோ அல்லது வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றோ திருமணம் செய்வதைத் தடை செய்துள்ளது. திருமணத்திற்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் அவசியம்.

‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை’ (அல் குர்அன் 4:19) அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இதன் ஊடாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பது பெண்ணின் உரிமை என்பது தெளிவாகிறது.

திருமணத்திற்கு முன்பு கணவன் மணக்கப் போகும் தன் மனைவிக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். கணவனிடமிருந்து திருமணம் செய்யும் மனைவி மஹர் எனும் மணக்கொடை பெறுவதை இறைவன் உரிமையாக்கியுள்ளான். இது குறித்து அல் குர்ஆன், ‘நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்’ (4:4) என்று குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் இல்லற வாழ்வில் இணைந்து வாழ முடியாத நிலை வரும்போது விவாகரத்து பெறவும் கூடிய உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி உள்ளது.

‘அல்லாஹ்வின் வரம்புகளை அவர்கள் இருவரும் நிலை நிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்’ (2:229) என்ற வசனம் மூலம் கணவனை விவாகரத்து செய்யும் உரிமை மனைவிக்கு உள்ளது என்பது தெளிவாகிறது.

விவாகரத்து செய்த கணவனின் வீட்டில் ‘இத்தா’ காலத்தில் மனைவி வசிப்பது பெண்ணுக்கு இறைவன் அளித்த உரிமையாகும். இது குறித்து அல் குர்ஆன், ‘நீங்கள் பெண்களைத் ‘தலாக்’ சொல்வீர்களானால் அவர்களின் ‘இத்தா’வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) ‘தலாக்’ கூறுங்கள். இன்னும் ‘இத்தா’வைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டனர்’ (65:1). என்று குறிப்பிட்டுள்ளது.

இவ்வசனத்தின் ஊடாக ‘இத்தா’ காலத்தில் கணவன் வீட்டில் மனைவி வசிப்பதற்கும் அல்லாஹ் பெண்களுக்கு உரிமை அளித்துள்ளான்.

மேலும் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிய மார்க்கம், இஸ்லாம். ‘பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகம் உண்டு. அவ்வாறே பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டு’ (4:7) என்பதை அல் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்தியுள்ளது. சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது அல்லாஹ் வகுத்த கட்டளையாகும்.

அபூ முஷீரா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT