மண்டேலாவின் பாதையில் பயணிக்க உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு | தினகரன்

மண்டேலாவின் பாதையில் பயணிக்க உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நெல்சன் மண்டேலா அவர்கள் பயணித்த பாதையில் பயணிப்பதற்கு தான் உலகின் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக நேற்று (24) பிற்பகல் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமான நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சமாதான உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானம் பற்றி உலகிற்கு முக்கியமான பல பாடங்களை கற்றுக்கொடுத்த நெல்சன் மண்டேலா என்ற உன்னதமான ஆளுமையை பற்றி இன்று உலகத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலா அவர்களின் உன்னத ஆளுமை குறித்தும், அவர் பயணித்த பாதை குறித்தும் நினைவுகூரக் காரணம், இன்று உலகம் அத்தகையதொரு பாதையில் பயணிக்காமையே ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை துறத்தல் மற்றும் அதிகாரத்தை மட்டுப்படுத்தல் குறித்து அவரது ஆளுமை பல முன்மாதிரிகளை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சமாதானம் பற்றிய பாதையை உலகிற்கு கற்றுக்கொடுத்த உன்னத மானிட ஆளுமையான நெல்சன் மண்டேலா என்ற ஆளுமைக்காக இந்த சமாதான உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலா சமாதான உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றிய போது கூறியதாவது;

நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டை ஐ.நா சபை நடத்த தீர்மானித்த்தையிட்டு அதன் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பணிப்பாளர் சபைக்கு இலங்கை அரசினதும் மக்களினதும் மதிப்புக்குரிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்சன் மண்டேலா போன்ற சிரேஷ்ட மனிதநேயம் மிக்க, உலகிற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்ற தலைவர்கள், உலகின் மனித சமுதாயத்திற்கு தலைசிறந்த பாதையில் செல்வதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கறார்கள். அவர்களைப்பற்றி கதைப்பதற்கு காரணம், அவ்வாறான தலைவர்கள் இன்று இந்த உலகில் இல்லாமையே ஆகும்.

நெல்சன் மண்டேலா அவர்கள் இந்த உலகிற்கு அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் பற்றியும், அதிகாரங்களை துறப்பது தொடர்பிலும், மனித நேயத்துடன் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதற்கும் முன்தாரணமாக திகழ்ந்தவராவார்.

இன்றைய இந்த உலகம் நெல்சன் மண்டேலா அவர்கள் சென்ற பாதையில் செல்வதாக இல்லை. அதனாலேயே மண்டேலா அவர்களின் அந்தப் பயணத்தைப் பற்றி உலகிற்கு ஞாபகமூட்ட வேண்டியிருக்கின்றது.

இன்று இந்த உலகில் வாழும் இனங்கள் மத்தியிலும் அரச தலைவர்கள் மத்தியிலும் உலகிற்கு அரசியல் வழிகாட்டிகளாகயிருக்கும் வழிகாட்டிகள் மத்தியிலும், நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்க்கையின் குணாதிசயங்கள் எந்தளவுக்கு இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. ஆகையினால் சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மனிதநேயம் மிக்க தலைசிறந்த ஒரு பயணம் ஆகியவை பற்றி இந்த உலகிற்கு எடுத்துரைத்த, அவ்வாறான உன்னதமான தலைவர்களின் சுய சரிதங்களை இன்றை உலகத் தலைவர்கள் கற்றறிய வேண்டுமென்பதே என்னுடைய கருத்தாகும்.

அன்னாரது வாழ்க்கையில் உள்வாங்கப்பட்டிருந்த மனிதர்கள் மீதான அன்பு, அதிகாரம் மீது பற்றுக் கொண்டிராத தன்மை ஆகிய தலைமைத்துவ பண்புகளுக்காக இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் நன்மதிப்பையும் கெளரவத்தையும் மண்டேலா அவர்களுக்கு தெரிவிப்பதுடன், நெல்சன் மண்டேலா போன்ற தலைசிறந்த தலைவர்கள் சென்ற பாதையில் நாமும் பயணிப்போமென தெரிவித்தார்.


Add new comment

Or log in with...