Friday, April 19, 2024
Home » நபிகளாரின் சகோதரத்துவ வழிகாட்டல்

நபிகளாரின் சகோதரத்துவ வழிகாட்டல்

by sachintha
December 1, 2023 10:10 am 0 comment

‘மனிதர்களே..! உங்களை ஓர் ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் படைத்தோம்’ என்ற அல் குர்ஆன் வசனத்தை நபி (ஸல்) அவர்கள் தனது சொற்பொழிவுகளில் அடிக்கடி வழி மொழிந்தார்கள்.

மக்காவை வெற்றி கொண்டபோது இறை இல்லமான கஃபாவை வலம் வந்து ‘தவாப்’ செய்த பிறகு நபிகளார் உரையாற்றுகையில், ‘மக்களே..! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராய்ப் பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர். இறையச்சம் உள்ளவர். இன்னொருவன் தீயவன் நற்பேறற்றவன். அன்றி மனிதர்கள் அனைவரும் ஆதமின் மக்களே!’ என்றார்கள். (நபிமொழி)

தம் இறுதி ஹஜ் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது, ‘மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக… உங்கள் அனைவரின் அதிபதி ஒருவனே..! அரேபியனுக்கு அரேபியர் அல்லாதவனை விடவோ, அரேபியர் அல்லாதவனுக்கு அரேபியனை விடவோ, கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ, வெள்ளையனுக்கு கருப்பனை விடவோ இறையச்சத்தைப் பொறுத்தே தவிர எந்தவித மேன்மையும் இல்லை. இறைவனிடத்தில் மிகுந்த மதிப்புள்ளவர் உங்களில் மிகுந்த இறையச்சம் உள்ளவரே!…” என்று குறிப்பிட்டார்கள்.

(நபிமொழி)

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள், தன்னைப் பின்பற்றிய ஸஹாபாக்களை சீடர்கள் என்றோ, மாணவர்கள் என்றோ தொண்டர்கள் என்றோ ஒருபோதும் அழைத்ததில்லை. அவர்கள் அனைவரையும் ஸஹாபிகள் (தோழர்கள்) என்று அழைத்தார்கள். உலக வரலாற்றில் நபிகளாருக்கு முன்பு இத்தகைய தோழமை உணர்வை எவரும் தோற்றுவிக்கவில்லை என்பதே வரலாறு.

சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்க விரும்பிய நபி (ஸல்) அவர்கள், ‘மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப்போல சமமானவர்கள்’ என்ற உவமை நயத்தோடு உரைத்தார்கள். சீப்பில் ஒரு பல் உயர்ந்து இன்னொரு பல் தாழ்ந்திருந்தால் அது தலையைக் கிழித்து புண்ணாக்கி விடும். பண்பட்ட சமுதாயம் அமைய வேண்டுமானால் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை வேண்டும் என்பதை இந்த உவமை மூலம் விளக்கினார்கள்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களோடு அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு யூதரின் இறுதி ஊர்வலம் அந்த வழியாகச் சென்றது. இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்த தோழர்கள், “இறைத்தூதரே..! நமது கொள்கைகளை எதிர்க்கும் யூதர் ஒருவரின் பிரேதம் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?” என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நபிகளார், ‘அவர் மனிதராயிற்றே’ என்று பதில் அளித்தார்கள். (நபிமொழி)

இச்சம்பவத்தின்படி மனிதர்கள் என்ற அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது என்பது தெளிவாகிறது.

கருப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் (ரழி) அவர்கள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு அடிமையாக இருந்தார். ஏக இறைக் கொள்கையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தபோது, பிலால் (ரழி) அவர்களும் இஸ்லாத்தில் இணைந்தார். அதனால் மதிப்பும் மரியாதையும் கௌரவமும் அவரோடு இணைந்தன. நபிகளாரும் தோழர்களும் சேர்ந்து கட்டிய ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசலில் முதன் முறையாக தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) சொல்லும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு இஸ்லாம் எடுத்துரைத்த சமத்துவமே காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அறிவுரைகள் வெறும் பேச்சளவோடு நின்றுவிடாமல், உலகளாவிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கிக் காட்டிய உன்னத மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. இந்த உலகம் முழுவதும் பரவி இருந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களையும், மொழி பேசுபவர்களையும் கொள்கை அடிப்படையில் இணைத்து ஒரே சமுதாயமாக (உம்மத்) உருவாக்கிய பெருமை நபிகளாருக்கு மட்டுமே உண்டு.

‘வணங்கி வாழ்வோம். பிறரோடு இணங்கி வாழ்வோம்’ என்ற இலட்சிய முழக்கத்துடன் இஸ்லாம் செயல்படுகிறது ‘வணங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

“கூறி விடுவீராக! ஓ! நிராகரிப்பாளர்களே! நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. நான் யாரை வணங்குகிறேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்”

(அல் குர்ஆன்-109:1)

பிந்த் இஸ்மாயீல்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT