ஒரு வாரத்தில் அரச அதிபர் வராவிட்டால் தீக்குளிப்பதைத் தவிர வேறு வழியில்லை | தினகரன்

ஒரு வாரத்தில் அரச அதிபர் வராவிட்டால் தீக்குளிப்பதைத் தவிர வேறு வழியில்லை

ஆனந்தசங்கரியிடம் ஆக்ரோஷமாகத் தெரிவித்த பொத்துவில் மக்கள்

எமது பிரச்சினை நாட்டின் ஜனாதிபதியின் கவனத்திற்கு இன்னும் செல்லவில்லை. சென்றிருந்தால் எமக்கு தீர்வுகிட்டும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எது எவ்வாறாக இருந்தாலும் இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் இதுவரை இங்குவந்து எங்களைப் பார்க்கவில்லை. இன்னும் ஒரு வாரத்திக்குள் எம்மை வந்து அரசாங்க அதிபர் சந்திக்காவிட்டால் நாங்கள் தீக்குளிப்பதைத் தவிர வேறுவழியில்லை எனப் பொத்துவில் கனகர் கிராம மீட்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் மக்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் தெரிவித்தனர்.

பொத்துவில் 60 ஆம் கட்டை கனகர் கிராம மக்கள் 1978 ஆம் ஆண்டிலிருந்து குடியிருந்து 1990 ஆம் ஆண்டு வன்செயல் காரணமாக இடம் பெயர்ந்து வாழ்ந்த நிலையில், தற்போது அவர்களின் காணியை வனப்பரிபால திணைக்களம் கையக்கப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதனை மீட்பதற்கான தொடர் நில மீட்பு போராட்டம் ஒன்றினை 41ஆவது நாளாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் 41 வது நாள் போராட்டத்தின் போது ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி அதன் உபதலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை, கட்சி செயலாளர் வி.சங்கையா ஆகியோர் மக்களைச் சந்தித்திருந்தனர். இதன் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

இவ்விடத்தில் 1978 ஆம் ஆண்டில் இருந்து 278 குடும்பங்கள் குடியிருந்தோம். 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய யுத்தம் காரணமாக இங்கு வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எங்களது உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், கல்முனை, பதுளை மட்டக்களப்பு, இரத்தினபுரி போன்ற இடங்களில் சென்று இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தோம். ஆனால், தற்போது எங்களின் சொந்த இடங்களில் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதன் காரணத்தினால் நாங்கள் மீண்டும் குடியேற வந்தபோது, வனப் பரிபாலன திணைக்களம் தங்களுக்குச் சொந்தமான காணி என எம்மை விரட்டுகின்றனர்.

நாட்டின் பல பாங்களில் எவ்வளவோ காணிகள் விடுவிற்கப்படுகின்ற நிலையில், எங்களுக்கு மாத்திரம் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எமது காணிகளின் சிலபகுதிகளை சிலர் பிடித்து வேலிபோட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு அனுமதி வழங்கியது யார்? அவர்களுக்கொரு சட்டம், எங்களுக்கொரு சட்டமா?

எமது பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருவதாக கூறியவர்கள் எவரும் எந்தவித நடவடிக்கையும் எடுத்தாதத் தெரியவில்லை. இன்னும் சாதகமான பதில் எம்மை வந்து சேரவில்லை. நாங்கள் பலதரப்பட்ட கஸ்டத்தின் மத்தியில் இந்தப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். சொந்த வசிப்பிடத்தையே அரசாங்கத்திடம் பறிகொடுத்து இந்த நாட்டில் வசிப்பதற்கு சொந்த இடமில்லாதவர்களாக வாழ்ந்துவருகின்றோம். எத்தனை காலத்திற்குத்தான் நாங்கள் இரவலில் வாழ்வது? எமது பிள்ளைகள் எமக்கொரு சொந்த இடமில்லையா என எம்மிடம் கேட்கின்றனர். இதற்கு என்னபதில் கூறுவது?

இவ்வாறான நிலையில் தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். எம்மை வந்து ஒரு வாரங்களுக்குள் அரசாங்க அதிபர் சந்திக்கத் தவறும் பட்சத்தில், நாங்கள் தீக்குளிப்போம். இதனைத்தவிர வேறுவழி தெரியவில்லை. எமது நிலை ஜனாதிபதிக்குத் தெரிந்தால் உடன் நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகின்றோம் என இதன்போது போராட்டக்கார்கள் தெரிவித்தனர்.

இதனை செவிமடுத்த ஆனந்தசங்கரி கூறுகையில்: நான் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. ஆனால், இந்த இடத்தில் வீடு வழங்கிய கனகரெத்தினம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நானும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். இது சம்பந்தமாக நான் சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடுவேன். அரசாங்க அமைச்சரிடமும் கதைப்பேன். சாதகமான முடிவு வரும் நீங்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் இறங்கவேண்டாம் என இதன்போது தெரிவித்தார்.

காரைதீவு குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...