7 பேர் விடுதலை: ஆளுநருடன் அற்புதம்மாள் நேற்று சந்திப்பு; மனு கையளிப்பு | தினகரன்

7 பேர் விடுதலை: ஆளுநருடன் அற்புதம்மாள் நேற்று சந்திப்பு; மனு கையளிப்பு

தமிழக ஆளுநரை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது 7 பேரை விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் அற்புதம்மாள் வலியுறுத்தினார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தீர்மானமும் நிறைவேற்றி அதை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது.

ஆனால், அந்தப் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த வித முடிவையும் எடுக்கவில்லை, அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் 7 பேர் விடுதலை தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்த தாமதம் வேண்டாம் என்றும் விரைந்து ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்துப் பேசினார். அப்போது 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையில் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்தேன். அந்த மனுவில் நீதிபதி கே.டி.தோமஸின் தீர்ப்பு விவரத்தையும் இணைத்திருக்கிறேன். எனது மகனின் தரப்பு நியாயத்தை மனுவில் எழுதியிருப்பது குறித்தும் விளக்கினேன்.

அதனை ஆளுநர் கனிவுடன் கேட்டார். மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். எனவே அமைச்சரவை பரிந்துரையை உடனடியாகப் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது". இவ்வாறு அற்புதம்மாள் கூறினார்.


Add new comment

Or log in with...