பொது வேட்பாளர் வெற்றி; ஜனாதிபதி யாமீன் தோல்வி | தினகரன்

பொது வேட்பாளர் வெற்றி; ஜனாதிபதி யாமீன் தோல்வி

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகம்மது சோலிஹ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் தோல்வியடைந்தார். மாலைதீவு மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகவும், புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இப்ராஹிம் சோலிஹூக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அப்துல்லா யாமீன் நேற்று அறிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 92 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்தன. இரவு 7 மணிவரை வாக்குப்பதிவுகள் இடம்பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்த இத்தேர்தலில் மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் எதிர்க்கட்சியில் களமிறங்கிய நீண்டகால பாராளுமன்ற உறுப்பினரான இப்ராஹிம் அதிர்ச்சிவெற்றியடைந்தார். சோலிஹ் 58 வீதமான வாக்குகளை

அதாவது 134,616 வாக்குகளைப் பெற்ற அதேநேரம், யாமீன் 42 வீத வாக்குகளை அதாவது 96,142 வாக்குகளைப் பெற்றார். இதன் அடிப்படையில் இப்ராஹிம் சோலிஹ் வெற்றிபெற்றதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்தது.

மாலைதீவு ஆளும் கட்சியின் செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திவந்த நிலையில், அதிகார மாற்றம் சுமுகமான முறையில் இடம்பெறுமா என்ற கேள்விகளும் எழுந்திருந்தன. இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்துல்லா யாமீன் நேற்றையதினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். மக்கள் வழங்கிய தீர்ப்பினைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும், பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் கூறினார்.

நவம்பர் மாதம் 17ஆம் திகதியுடனேயே தனது பதவிக்காலம் முடிவடைவதால் அதுவரை தான் ஜனாதிபதி பதவியில் இருப்பேன் என்றும் அப்துல்லா யாமீன் குறிப்பிட்டார்.

தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம் என்ற சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலை இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வந்தன. தேர்தல் முடிவுகளை ஆணைக்குழு அறிவிக்க முன்னர் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மாலைதீவு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டன.


Add new comment

Or log in with...