தமிழக அரசின் ஐம்பதினாயிரம் புத்தகங்கள்; எவரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை | தினகரன்

தமிழக அரசின் ஐம்பதினாயிரம் புத்தகங்கள்; எவரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை

வெளிப்படைத்தன்மையுடன் பகிர்ந்தளிக்கப்படும் -

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் கல்வி இராஜாங்க அமைச்சிற்கு கையளித்த 100,000 புத்தகங்களில் 50 ஆயிரம் புத்தகங்களை யாழ் நூலகத்திற்கு வழங்கியிருப்பதாகவும் மிகுதி 50,000 புத்தகங்களை ஏனைய மாகாணங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். நூலகத்திற்கு வழங்கப்பட்ட பின்பு மிகுதியான புத்தகங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்ட நிலையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

தமிழ் நாடு அரசாங்கத்தின் மூலமாக இராஜாங்க கல்வி அமைச்சிற்கு 100,000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அதனை பெற்றுக் கொள்வதற்காக நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாகவே இவை கிடைக்கப்பெற்றன. அதில் 50,000 புத்தகங்களை அண்மையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றலுடன் யாழ் நூலகத்திற்கு கையளித்தோம். மிகுதியான புத்தகங்களை மத்திய, ஊவா, சப்ரகமுவ உட்பட ஏனைய மாகாணங்களுக்கும் பாடசாலையில் இருக்கின்ற வாசிகசாலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

மிகுதியாகவுள்ள 50,000 புத்தகங்களும் எங்களுடைய கல்வி அமைச்சில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பகிர்ந்தளிப்பதற்காக நாம் அந்தந்ந மாகாணங்களில் மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஊடாகத் தகவல்களைப் பெற்றுக் கொண்டு, இந்தப் புத்தகங்களைக் கையளிக்க இருக்கின்றோம். எனவே, இது தொடர்பாக யாரும் குழப்பமடைய தேவையில்லை. அனைத்து விடயங்களும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமது நிருபர்

 


Add new comment

Or log in with...