ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றடைந்தார் | தினகரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றடைந்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியுயோர்க் சென்றடைந்தார்-President-Maithripala-Sirisena-Arrived-in-New-York

 

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) இரவு நியூயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

நியுயோர்க் நகரில் ஜனாதிபதி தங்கியுள்ள ஹோட்டலில் அமைச்சர் திலக் மாரப்பன, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா ஆகியோர் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை வரவேற்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர், நேற்றைய தினம் (22) இரவு இலங்கையிலிருந்து அமெரிக்கா பயணமானார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக இடம்பெறும் பூகோள சமாதானத்தி்ற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு நாளை (24) இடம்பெறுகின்றது. இம்மாநாட்டிலும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பான  பூகோள நடவடிக்கைகளுக்கான விசேட சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் நாளை (24) பங்குபற்றவுள்ளார்.

காச நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டத்தொடரொன்றும் அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  

ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக இலங்கை தொடர்பில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நிதியம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேநேரம் கூட்டத்தொடரில் பங்குபற்றும் உலக தலைவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோருடனும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

“ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல்: அமைதியும், நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புக்களும்” என்ற கருப்பொருளின் கீழ் ஐ. நா பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் நியுயோர்க் நகரில் உள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் பிரதான கூட்டத்தொடர் நாளை மறுதினம் (25) ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கூட்டத்தொடரில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.


Add new comment

Or log in with...