சீன எல்லை சிக்கிமில் முதல் விமான நிலையம் | தினகரன்

சீன எல்லை சிக்கிமில் முதல் விமான நிலையம்

சீன எல்லையில் இருந்து 60 கி.மீ. துாரத்தில் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

தலைநகர் காங்டாக்கில் இருந்து 30கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்யாங் நகரில் 201 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 5 இலட்சம் பயணிகளைக் கையாளும் வசதிகொண்ட விமான நிலையத்தை அமைப்பதற்காக 553 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 8 ம் திகதி முதல் இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்க உள்ளது.

ஒக்டோபர் 8 அன்று சிக்கிமின் பாக்யாங் விமான நிலையத்திற்கு முதல் பயணிகள் விமானம் இயக்கப்பட உள்ளது.

மார்ச் 10 ம் திகதி சோதனை முயற்சியாக கொல்கட்டா - பாக்யாங் இடையே 78 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் இயக்கப்பட்டது.

முதலில் ஒக்டோபர் 4 முதல் பயணிகள் விமானம் இயக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தற்போது இது ஒக்டோபர் 8 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் இந்திய பொறியாளர்களின் திறமைக்கு ஒரு சான்று என்று கூறப்படுகிறது. கடுமையான மலைப்பகுதியில் புதிய தொழில் நுட்பத்தில் விமான நிலைய கட்டுமான பணி நடந்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்து 60 கி.மீ. துாரத்தில் தான் சீன எல்லை உள்ளது.

எனவே அதிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தேவைப்பட்டால் இராணுவ விமானங்களையும் தரை இறக்கும் வகையில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...