Home » சர்வதேச நாணய நிதியத்தின்இரண்டாம் தவணை கடன் இம் மாதம் கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின்இரண்டாம் தவணை கடன் இம் மாதம் கிடைக்கும்

by sachintha
December 1, 2023 7:05 am 0 comment

பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை

IMF இன் ஒத்துழைப்புடன் நாட்டை வெகுவிரைவில் மீளக் கட்டியெழுப்ப முடியுமென்றும் நேற்று தெரிவிப்பு

 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை வெகுவிரைவில் மீளக் கட்டியெழுப்ப முடியுமென்றும் இரண்டாம் தவணைக் கடனை டிசம்பர் மாதம் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக தெரிவித்த அவர், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்துக்கு சர்வதேச கடன் வழங்குநர் குழு இணக்கம் தெரிவித்துள்ளமை அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

இலங்கைக்கான முக்கிய கடன் வழங்குநர்களான இந்தியா,ஜப்பான்,பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சீனாவும் கடன் மறுசீரமைப்புக்கு சார்பான நிலைப்பாட்டிலேயே உள்ளமை வரவேற்புக்குரியது.

அனைத்து கடன் வழங்குநர்களும் சமமான நிலையில் மதிக்கப்படுவார்கள் என்றும் எவருக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படமாட்டாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கடன் தவணையுடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தும் போது ஏற்பட்ட காலதாமதத்தால் இரண்டாம் தவணை நீடிக்கப்பட்ட கடன் தவணை கிடைப்பது தாமதமானது.

அதனை எதிர்க்கட்சியினர் தமது அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

எவ்வாறெனினும் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் அடுத்த மாதமளவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் வங்குரோத்து நிலையிலிருந்து வெகுவிரைவில் நாட்டை மீட்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT